மன்மோகன் சிங் மறைவிற்கு ரிஷாட் இரங்கல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் மூளையாக பிரகாசித்த மன்மோகன் சிங், இலங்கையின் பல்துறை அபிவிருத்திக்கு கைகொடுத்த ஒருவர், அவரது இழப்பு கவலைக்குரியது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு தொடர்பில், அவர் வெளியிட்டுள்ள அனுதாப அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இவர், 2004 முதல் 2014 வரையான காலப்பகுதியில் 13ஆவது இந்தியப் பிரதமராகப் பணியாற்றியுள்ளார்.
ஆழ்ந்த அனுதாபம்
1991இல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதார சீர்திருத்தத்தின் மூளையாக கருதப்படுகின்றார். அவர் தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலகமயமாக்கல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார்.
2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற போது, கட்சித் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பொறுப்பேற்க மறுத்ததால், மன்மோகன் சிங் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.
அவரது தலைமையில், இந்தியா நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்களை கண்டது.
பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் இலங்கையின் பொருளாதாரம், சமூக, கலாசார மேம்பாடுகள் அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளார். மேலும், இலங்கை வாழ் மக்களுக்கு 50,000 வீட்டுத்திட்டத்தை, தமது காலத்தில் வழங்கிய பெருந்தகை ஆவார்.
அவரது இழப்பு தொடர்பில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |