கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பைசல் நகர், பாரதிபுரம் பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவமானது நேற்று(6) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
மூன்று பிள்ளைகளின் தந்தையான மஹ்மூது முகம்மது அலியார் (55 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணை
குறித்த சடலமானது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடத்திலுள்ள குடிசையிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த குடிசைக்கு அண்மித்த பகுதியிலே இவர் வாழும் சிறிய குடிசை போன்ற வீடும் அமைந்துள்ளது.
இவருக்கு இரு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் உள்ளனர்.
இந்த குடிசையின் சொந்தக்காரர், தனது குடிசையை பார்க்கச் சென்ற போதே, சடலம் ஒன்று கிடப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மனைவியின் கருத்து
மேலும் இது தொடர்பாக அவரது மனைவி கருத்து தெரிவிக்கும் போது,
"அவரிடமிருந்த குடிப்பழக்கம் காரணமாக, அவரை விட்டு நாங்கள் நான்கு மாதமாக பிரிந்து வாழ்கிறோம்.
வெள்ளம் காரணமாக எனது குடிசையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டதனால் எனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு, உப்பாறு பகுதியில் உள்ள எனது தாயின் வீட்டுக்கு சென்று விட்டேன்.
இந்த நிலையிலே, அவர் மரணமான செய்தியை கேள்விப்பட்டு, பிள்ளைகளோடு எனது வீட்டுக்கு வந்திருக்கிறேன்.
அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது, எங்களுக்கு பாடசாலைக்கு செல்கின்ற மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். நான் வீடு, வீடாக சென்று பிச்சை எடுத்துதான் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து பாடசாலைக்கு அனுப்புகிறேன்.
வெளிநாடு சென்றால் எங்களது பிள்ளைகளை யார் பராமரிப்பது. நான் ஒரு நோயாளியாகவும் இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |