தமிழ் மொழிபெயர்ப்பு குர்ஆன் ஏன் தடை செய்யப்பட்டது... கேள்வியெழுப்பியுள்ள ஹிஸ்புல்லாஹ் எம்.பி
அரபு மொழி புத்தங்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவருவதற்கு இருக்கும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நேற்று (17) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அதேநேரம் ஒரு வருடத்திற்கு முன்னர் சவூதி அரேபியாவில் இருந்து அனுப்பப்பட்ட பல ஆயிரம் அல்-குர்ஆன் தமிழ்மொழி பெயர்ப்பு பிரதிகள் இன்னும் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றையும் விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைத்துல்மால் நிதியம்
அதேபோன்று, சர்வதேச நாடுகளில் அமைந்துள்ளவாறு 'பைத்துல்மால் நிதியம்' அமைக்கப்படவேண்டும். அதற்கு உதவுவதற்கு தயாராக உள்ளேன்.
மகர சிறைச்சாலை பள்ளிவாசல் பிரச்சினை மற்றும் நோர்வூட் பள்ளிவாசலுக்கு சொந்தமான வீட்டு பிரச்சினை போன்றவற்றை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
அத்தோடு, நாட்டில் இருக்கும் அரபுக்கல்லூரிகள் அனைத்தும் பொதுவான பாடத்திட்டம் ஊடாக கொண்டுசெல்ல தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
அதேநேரம் அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும் பரீட்சைகளை பரீட்சைகள் திணைக்களம் ஊடாக நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அரபுக் கல்லூரிகள்
இந்நிலையில், நாட்டில் 321 பதிவு செய்யப்பட்ட அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. 132 பதிவு செய்யப்படாத அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. 72 அரபுக்கல்லூரிகள் பதிவுக்காக விண்ணப்பித்துள்ளன. அந்த பதிவுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேநேரம் இந்த அரபுக்கல்லூரிகள் அனைத்தும் பொதுவான பாடத்திட்டம் ஒன்றின் ஊடாக கொண்டுசெல்லப்பட வேண்டும். இது தொடர்பில் பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டுவந்த நிலையில், பொதுவான பாடத்திட்டம் அமைக்க குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.
குறித்த குழு அது தொடர்பான பாடத்திட்டத்தையும் தயாரித்திருந்தது.
பின்னர் இந்த பாடத்திட்டத்தை மீள் பார்வையிட 2022ஆம் ஆண்டும் நிபுணர்குழு அமைக்கப்பட்டபோது, அந்த நிபுணர்குழுவும் அதுதொடர்பில் ஆராய்ந்து குறித்த பாடத்திட்டத்துக்கு ஆதரவளித்திருந்தது.
பின்னர் கல்வி அமைச்சுக்கு இது மாற்றப்பட்ட போது இந்த பாடத்திட்டத்தை மீள் பரிசீலனைசெய்ய மீண்டும் குழுவொன்று அமைக்கப்பட்டது.
முறையான பயிற்சிகள்
அந்த குழுவும் குறித்த பாடத்திட்டத்துக்கு அனுமதியளித்திருக்கிறது. அதனால் அரசாங்கம் இந்த பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் பள்ளிவாசல்களில் கடமை புரியும் உலமாக்கள் மற்றும் முஅத்தீன்களுக்கு முறையான பயிற்சி திட்டம் ஒன்று முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் ஊடாக நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நிகழ்த்தப்படும் பிரசங்கங்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதேவேளை, முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பிராந்தியம் ஒன்று மட்டக்களப்பில் இருக்கிறது.
15 வருடங்களுக்கு முன்னர் இது அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது இன்னும் முறையாக இயங்காமல் இருக்கிறது. அதனால் அதற்கு ஒரு உதவி பணிப்பாளர் ஒருவரை நியமித்தும் தேவையான அதிகாரிகளை நியமித்தும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் இருந்து சிறிய தேவைக்கும் கொழும்புக்கு வந்துபோக தேவை ஏற்படாது. அத்துடன் இந்த பிராந்தியத்தை ஊவா மாகாண மக்களும் பயன்படுத்த முடியும் என கோரிக்கைகள் முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |