சம்மாந்துறையில் கசிப்பு நிலையம் முற்றுகை : அதிரடிப்படை சுற்றிவளைப்பு
அம்பாறை மாவட்டம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை நடத்தி வந்த சந்தேக நபரை சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம்(21) இரவு சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும், இந்த கைது நடவடிக்கையானது சம்மாந்துறை விசேட அதிரடிப்படை உப பொலிஸ் பரிசோதகர்களின் தலைமையில் விசேட அதிரடிப்படை குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்கள்
இந்த சுற்றிவளைப்பில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடத்திவந்த 50 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் இருந்து 80,000 மில்லிலீட்டர் கசிப்பு 170,000 மில்லிலீட்டர் கோடா, 130,000 மில்லிலீட்டர் வடி, 210 லீட்டர் இரும்பு பரள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
தொடர்ந்தும், சம்மாந்துறை வீரமுனை 03 பகுதியைச் சேர்ந்த இவரிடமிருந்து சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும், சந்தேக நபர் உட்பட சான்று பொருட்கள் யாவும் சவளைக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தேக நபரை இன்று(23) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளையும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் சவளைக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |