சிறுபான்மை சமூகத்திற்காக குரல் கொடுத்த தலைவர் இல்யாஸ்: நாடாளுமன்றில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி
இன, மத வேறுபாடுகளுக்கப்பால் சிறுபான்மை சமூகம் பாதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எம். இல்யால் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்(Hizbullah) நினைவுகூர்ந்துள்ளார்.
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான , ருக்மன் சேனாநாயக்க, டாக்டர்.ஐ.எம்.இல்யாஸ், ரெஜினால்ட் பெரேரா, சிறினால் டி மெல் ஆகியோர் தொடர்பில் நேற்று(24) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணைகள் மீது கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம் அரசியலை நோக்குகின்றபோது முக்கியமானதொரு போராளியாகயிருந்ததுடன் தன்னுடைய சிறுவயது முதல் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், சர்வதேச ரீதியிலாக முஸ்லிம் சமூகம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அந்த மக்களுக்காக குரல்கொடுப்பவருமாக செயற்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற வாழ்க்கை
மேலும், 1994 ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு 2000 ஆம் ஆண்டு வரை மிக முக்கியமான காலகட்டத்திலே மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களோடும் என்னோடும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
இந்த நிலையில், வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் தமிழீழ விடுதலை புலிகளால் வெளியேற்றப்பட்ட மக்களை புத்தளத்தில் மிக அன்போடு வரவேற்று அதற்கு தலைமைதாங்கி புத்தளத்தில் இருந்த மார்க்கத்தலைவர்கள், சமூகத்தலைவர், புத்திஜீவிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து அந்த மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு முன்னின்று உழைத்துள்ளார்.
அத்துடன், அந்த மக்களை மீள குடியேற்றுவதற்கு, காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு, வீட்டு வசதிகளை செய்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் இரவு பகலாக பாடுபட்டதை நாம் அறிவோம்.
அதேபோன்று, காத்தான்குடி, ஏறாவூர் பிரதேசங்களில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டபோதெல்லாம் எங்களிடம் வந்து எங்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் சொல்லுகின்ற நல்ல பண்பு கொண்ட மனிதராகவும் காணப்பட்டார்.
எனினும், அவர் தற்போது எங்களை விட்டு பிரிந்திருக்கிறார் அவருக்காக பிராத்திக்கிறோம். இறைவன் அவரது நற்பணிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |