கண்டி மாணவி கடத்தல் விவகாரம்! தாயின் வாக்குமூலம்
கம்பளை - தவுலகல பிரதேசத்தில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரின் தாயார் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.
கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மாணவி தன்னுடைய சகோதரரின் மகள் என்றும், தனது மகனை சகோதரருடைய குடும்பத்தார் ஏமாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாயார் வெளியிட்ட தகவல்கள் கம்பளை - தவுலகல பகுதியில் பாடசாலை மாணவி கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்றையதினம்(14) கம்பளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தாயின் வாக்குமூலம்
இதன்போது, கடத்தலில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபரையும், வானின் சாரதியையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது.
இந்தநிலையில், கடத்தப்பட்ட மாணவியின் தந்தை நேற்று முன்தினம் பொலிஸ் நிலையத்தில் வைத்து தெரிவிக்கும்போது, “தனது சகோதரியின் மகன், தன்னுடைய மகளை கடத்தி பெருந்தொகை பணத்தை கப்பமாக கோரியதாக” தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், நேற்றையதினம் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கடத்தப்பட்ட மாணவி ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரதான சந்தேகநபரின் தாயார், மாணவியின் தந்தை சுமத்திய குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
அத்துடன், தன்னுடைய மகன் வெளிநாட்டில் வேலை செய்து கிட்டத்தட்ட 32 இலட்சம் ரூபா பணத்தினை தன்னுடைய சகோதரனுக்கு வழங்கியதாகவும், இந்த பணத்தினைக் கொண்டு வாகனங்கள் வாங்கியதுடன், தனது சொந்த தேவைகள் அனைத்தையும் தனது சகோதரர் பூர்த்தி செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
குடும்பத்தாரின் செயல்..
மேலும், தனது சகோதரனுடைய மகளுக்கும், தன்னுடைய மகனுக்கும் திருமணம் செய்வதாக குடும்பத்திற்கு பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்த நிலையில், பெருந்தொகையான பணத்தினைப் பெற்றுக் கொண்ட பின்னர் தன்னுடை மகனை தனது சகோதரன் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் அந்த தாயார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, கடத்திச் செல்லப்படும் போது, தனது தந்தை மீது தவறில்லை என்றால், அந்த மாணவி அம்பாறை வரை செல்லாமல் இடையிலேயே கத்தி, கூச்சலிட்டு தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம் . தனது தகப்பன் மீதிருந்த தவறை உணர்ந்ததனாலேயே மாணவி அமைதியாகச் சென்றதாகவும் குறித்த தாயார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |