அலி சப்ரியின் கருத்திற்கு ஜம்இய்யா வெளியிட்ட கடும் கண்டனம்
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்திருத்தம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அலிசப்ரி தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஜம்மியத்துல் உலமா சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அண்மையில் ஒரு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில், முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்திற்கு ஜம்இய்யா தடையாக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.
குறித்த கருத்து அர்த்தமற்றதும் அடிப்படை அற்றதும் என ஜம்மியத்துல் உலமா சபை கண்டித்துள்ளது.
சப்ரியின் கருத்து
இது தொடர்பாக ஜம்மியத்துல் உலமா சபையின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, அதன் வரலாறு முழுவதிலும் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகள் மற்றும் நலன்கள் ஆகியவற்றை பாதுகாக்கும் பணியில் தொடர்ந்து அர்ப்பணத்துடன் பங்கேற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்த செய்தியாகும்.
அந்த வகையில், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத் திருத்தங்கள் தொடர்பான விவகாரங்களில், அரசாங்கத்தால் அவ்வப்போது நியமிக்கப்படும் குழுக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.
வெளியான கண்டனம்
பல்வேறு பகுதிகளில் மார்க்க வழிகாட்டல்களுக்கு முரணாக அமையாமல் தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதோடு, மார்க்கத்துக்கு முரண்படும் விடயங்களில் மாற்று வழிகளை முன்வைத்து, ஜம்இய்யா பல பரிந்துரைகளை வழங்கியிருப்பதையும் இங்கு குறிப்பிடுகிறோம்.
அந்த வகையில் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத் திருத்தத்திற்கு ஜம்இய்யா தடையாக உள்ளது என்று அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்த கருத்து அர்த்தமற்றதும் அடிப்படை அற்றதுமாகும்.
இது தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முழுமையான நிலைப்பாடு விரைவில் பொது மக்களுக்கு வெளியிடப்படும் என்றும் ஜம்மியத்துல் உலமா சபை தனது ஊடகப்பிரிவின் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |