இம்ரான் எம்.பிக்கு எதிரான முகநூல் பதிவு : 50 மில்லியன் நட்டஈடு
முகநூல் ஊடாக, தனக்கு அவமானம் ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவிட்டமைக்கு எதிராக ஐம்பது மில்லியன் நட்டஈடு செலுத்த வேண்டும் என கோரி, தனது சட்டத்தரணி ஊடாக கோரிக்கை கடிதம் ஒன்றை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof )சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தினை நேற்றையதினம்(18) அனுப்பி வைத்துள்ளார்.
கடிதம்
அந்த கோரிக்கை கடிதத்தில், குறிஞ்சாக்கேணி, கிண்ணியா எனும் விலாசத்தினை வசிப்பிடமாக கொண்ட, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அறிவுறுத்தலுக்கமைவாக இக்கோரிக்கைக்கடிதம் அனுப்பி வைக்கப்படுகின்றது.
எனது கட்சிக்காரர் ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.
தாங்கள் முகப்புத்தகத்தில் 2025.06.25 அன்றோ அல்லது அதற்கண்மித்த திகதியொன்றிலோ எனது கட்சிக்காரர் தொடர்பில், மக்களை பிழையாக வழி நடாத்தியும், மக்களுக்கு தவறான புரிதலை உருவாக்கும் விதத்திலும், திட்டமிட்டு முகப்புத்தகத்தில் பதிவொன்றினை செய்துள்ளீர்.
இதன்மூலம் எனது கட்சிக்காரரின் அரசியல் எதிர்காலத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தி, அவருக்கு இருக்கும் நன்மதிப்பில் கலங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளீர்.
இதன் விளைவாக சமூகத்தின் மத்தியில், எனது கட்சிக்காரருக்கு ஈடு செய்ய முடியாத அவதூற்றினையும் இழுக்கினையும் தங்களுடைய பதிவு ஏற்படுத்தி உள்ளது என்பதை உங்களின் கவனத்திற்கு அறியத் தருகின்றேன்.
நட்டஈடு
எனவே, இதன் மூலம், எனது கட்சிக்காரருக்கு பாரிய மன உழைச்சல் ஏற்படுத்தப்பட்டிருப்பதோடு, அவரது கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் கலங்கத்தினையும் ஏற்படுத்தியுள்ளது என்பதால், எனது கட்சிக்காரருக்கு ரூபா ஐம்பது மில்லியன் (ரூபா. 50,000,000.00) செலுத்த வேண்டும் என்றும், குறித்த இழப்பீட்டு தொகையினை இன்றய தினத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் கோரப்படுகின்றீர்கள்.
தவறும் பட்சத்தில் தங்களுக்கெதிராக எந்தவிதமான முன்னறிவித்தலின்றி திருகோணமலை நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்து குறித்த பணத்தொகையினையும் வழக்கு செலவினையும் தங்களிடமிருந்து கோர வேண்டிவருமென மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இது குறித்து, இம்ரான் மகரூப் கருத்து கேட்டபோது, குச்சவெளி ,புல்மோட்டை பிரதேச ACMC முக்கியஸ்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளேன்.
குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ACMC க்கு ஆதரவு வழங்காத காரணத்தால், குச்சவெளி மற்றும் புல்மோட்டை பிரதேச சில ACMC முக்கியஸ்தர்கள் மற்றும் சில ACMC ஆதரவாளர்கள் எனக்கு சமூக வலைத்தளம் ஊடாக மேற்கொண்ட தொடர்ச்சியாக சேறு பூசும் நடவடிக்கைகளுக்கு எதிராக எனது சட்டதரணி ஊடாக சட்டநடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |