சர்வதேச சித்திரவதைகளுக்கு எதிரான தினத்தையொட்டி முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு
இலங்கை பொலிஸாருடனான மோதல்கள் மற்றும் தடுப்புக் காவலின் போது ஏற்படும் சுட்டுக் கொல்லப்படுதல் உள்ளிட்ட மரணங்களைத் தவிர்ப்பதற்காக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 2025ஆம் ஆண்டுக்கான பொதுவழிகாட்டுதல்களையும் பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களின் முக்கியத்துவம் குறித்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை இணைப்பதிகாரி அப்துல் அஸீஸ், சர்வதேச சித்திரவதைக்கெதிரான தினத்தை முன்னிட்டு இன்று (02) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் விளக்கமளித்தார்.
தடுப்புக்காவல் மரணம்
அவரது விளக்கத்தில், 2020 ஜனவரி முதல் 2023 மார்ச் மாதம் வரை 49 தடுப்புக் காவல் மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக கூறினார்.
இவை பற்றிய முறைப்பாடுகள், விசாரணைகள் மற்றும் அதன்பேரில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
வழிகாட்டுதல்களில் முக்கியமான அம்சங்கள்,
- உயிர்வாழ்வதற்கான உரிமை இலங்கை அரசியலமைப்பின் 13(4)வது உறுப்புரையின் கீழ், ஒவ்வொரு நபருக்கும் உயிர்வாழ்வதற்கான உரிமை உள்நாட்டிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பெண்கள் கைது செய்யும் போது ஒரு பெண் சந்தேகநபரை கைது செய்யும் போது, காவல்துறையின் குழுவில் ஒரு பெண் பொலிஸ் அதிகாரி கட்டாயமாக இருக்க வேண்டும்.
- தடுப்புக் காவலில் மரணம் ஏற்படுமாயின் மரணம் நிகழும் இடம் தடயவியல் தளமாக கருதப்பட வேண்டும். முழுமையான விசாரணை இடம்பெற வேண்டும். விசாரணை முடிவடையும் வரை அங்கு மாற்றம் ஏற்படக் கூடாது.
- பயிற்சிகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் மனித உரிமை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். ஆயுதங்களை கையாளும், முதலுதவி வழங்கும், தற்கொலை மனநிலையை அறியும், உளவியல் உதவிகளை வழங்கும் திறன்கள் அனைவருக்கும் கற்றுத்தரப்பட வேண்டும். வழக்கமான உளவியல் மற்றும் சமூக ஆதரவை வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
- கண்காணிப்பு வசதிகள் பொலிஸ் நிலையங்கள், தடுப்புக் காவல் கூடங்கள், விசாரணை அறைகள், தாழ்வாரங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் CCTV கண்காணிப்பு அமைப்புகள் கட்டாயமாக நிறுவப்பட வேண்டும்.
இவை அனைத்தும் மனித உரிமைகளை பாதுகாக்கவும், காவல்துறைச் செயல்பாடுகளை பொதுமக்கள் நலன் நோக்கிலும் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்று இணைப்பதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்வில், பொலிஸ், அரச, அரச சாரா அமைப்புகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













