வலுசக்தி அமைச்சு குறித்து ஹிஸ்புல்லாஹ் விசனம்
வலுசக்தி அமைச்சு நாட்டு மக்களுடைய நிலைமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்(MLAM.Hizbullah) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(03) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் வலுச்சக்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
மின்சக்தி அமைச்சு எமது நாட்டின் முதுகெலும்பு என்பதுடன் முக்கியமான திணைக்களங்களை கொண்ட அமைச்சாகும்.
பொருளாதார நிலை..
அதேபோல், நாட்டு மக்களின் நலனையும் பொருளாதார நிலையினையும் கருத்திற்கொண்டு, இந்த அமைச்சு செயற்பட வேண்டிய தேவையிருக்கிறது.
கடந்த நாட்களில் ஒரு பெரிய எரிபொருள் பிரச்சினை நாட்டில் உருவாகியது. பெட்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்கிவந்த மூன்று வீத தரகுப்பணத்தை உடனடியாக நிறுத்திக்கொண்டதே இப்பிரச்சினைக்கு காரணமாகும்.
இந்நிலையில், இந்த தரகுப்பணமானது, விநியோகஸ்தர்களுக்கு நீண்டகாலமாக கொடுத்துவரப்பட்டுள்ளதுடன், அதிலேதான் அவர்களது மொத்த செலவீனங்களும் அடங்குகிறது என்பது விநியோகஸ்தர்கள் மூலம் அறியக்கிடைக்கின்றது.
இந்த 3 வீத தரகுப்பணத்தை சிபெட்கோ நிறுவனம் மாத்திரமல்லாது அமெரிக்கா, அவுஸ்ரேலியா நிறுவனங்களும் வழங்குகின்றன . எனவே இந்நிலையில் பெட்றோலிய கூட்டுத்தாபனம் தீடீரென இவ்வாறானதெரு முடிவு எடுத்தமை தவறான தீர்மானமாகும்.
விநியோகஸ்தர்களுடன் கலந்துரையாடி இதுதொடர்பில் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்க வேண்டும்.
வணக்கஸ்தலங்களுக்கான மின்சக்தி
அதுமட்டுமல்லாமல், கடந்தகாலங்களில் வணக்கஸ்தலங்களுக்கு சூரிய கலம் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்னும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பள்ளிவாசல் மற்றும் தேவாலயங்களுக்கு வலுசக்தி அமைச்சு மூலமாக அனுமதி வழங்கப்படவில்லை.
தற்போதைய சூழ்நிலைகளில் மதஸ்தலங்கள் நிதி நிலமைகளை மேற்கொள்ள பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்திற்கொண்டு மதஸ்தலங்களுக்கு சூரிய மின்கலம் ஊடாக மின் சக்தியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சூரிய கலம் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |