கல்முனையில் செயற்படும் தீவிரவாத சிந்தனைக்குழு தொடர்பில் வெளியான தகவல்
கல்முனைப் பகுதியில் தோன்றியதாகக் கூறப்படும் தீவிரவாத சிந்தனைக்குழு தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புப் படையினரும் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று(04) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்துக்கு, புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார்.
தீவிரவாத சிந்தனைக்குழு
இது தொடர்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்ததாவது,
இந்த குழு தொடர்பான ஆரம்ப தகவல்கள் கிடைத்துள்ளது, இந்நிலையில் மேலதிக விபரங்களை வெளிக்கொணர அதிகாரிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.
இந்நிலையில், அந்தக் குழு அடையாளம் காணப்பட்டதா, தடை செய்யப்பட்டதா அல்லது கைது செய்யப்பட்டதா என்ற கேள்விகளுக்கு, அமைச்சர் பதிலளிக்கையில், “தற்போது கிழக்கு மாகாணத்தில் இயங்கும் இவ்வாறானதொரு குழு பற்றிய தகவல் மட்டுமே எமக்கு கிடைத்துள்ளது.
புலனாய்வு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த விடயத்தைச் சரிபார்த்து விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிகாரிகளுடனான கலந்துரையாடல்களின் போது தேசிய பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளையும் ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார்.
இப்போது நாம் உறுதிப்படுத்தக்கூடியது என்னவென்றால், பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர் என்பது தான்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |