கரையோர மக்களின் பிரச்சனையை தீர்க்க புதிய திட்டம் முன்னெடுக்கும் ரவூப் ஹக்கீம் எம்.பி!
கல்முனை (Kalmunai) பிரதேச கடலரிப்பு அபாயம் தொடர்பாக அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன்படி, கரையோர பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் டேனி பிரதீப் குமாரை திணைக்களத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது, கல்முனை கடற்கரைப்பகுதியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடலரிப்பு அபாயத்தை பற்றி தீவிரமாக கலந்துரையாடப்பட்டதுடன், அதனால் ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் இடர்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கடலரிப்பு
அதேவேளை, கடலரிப்பால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாஹுர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப்பையும், அதன் அருகிலுள்ள வீதியையும் கடல் உலுக்கியுள்ளதோடு, மீனவர் சமூகத்தின் வாழ்வாதாரமே பலவீனமடைந்துள்ளதையும் ஹக்கீம் எடுத்துரைத்தார்.
மேலும், மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசலின் கடற்கரைப் பகுதி மற்றும் ஹுதா பள்ளிவாசல் திடல் பகுதிகளும் கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில், இந்த அபாயமான சூழ்நிலையை ஆழமாக கவனித்து, அவசர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை உடனடியாக ஒருங்கிணைத்து செயலில் ஈடுபடுத்துமாறு பணிப்பாளர் நாயகத்திடம் ரவூப் ஹக்கீம் கடுமையாகக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


