உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச உதவித்தொகையுடன் பட்டப்படிப்பு!
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் முதல் பட்டப்படிப்பு (Undergraduate Degree) கல்வியைத் தொடர அரச உதவித்தொகை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்து கொண்டு உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை அறிவித்தார்.
உதவித்தொகை
அரசாங்கத்தின் "நாகரிகமான பிரஜை - முன்னேற்றகரமான மனிதவளத்தை உருவாக்குதல்" என்ற கொள்கை அறிக்கையின் அடிப்படையில், இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்திற்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, உலகின் தரவரிசைப்பட்டியலில் முதலாவது 500 இடங்களுக்குள் உள்ள, ஆங்கிலம் மூலம் கற்பிக்கப்படும் பல்கலைக்கழகங்களில் கல்வி பெறும் மாணவர்களுக்கு, அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 200 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான முதல் கட்டத்திலேயே, 20 முதல் 50 மாணவர்களை தேர்ந்தெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்க தகுதியானோர்..
தேர்வு செய்முறை குறித்து அமைச்சரவை தெரிவித்ததாவது, க.பொ.த. (உயர்தர) பரீட்சையின் முக்கிய பாடப்பிரிவுகளில் உயர் இசட் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பின்னர், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அடங்கிய நிபுணர் குழு, நேர்முகப் பரீட்சை மூலம் மாணவர்களை தேர்ந்தெடுக்கும்.
இந்த உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தும் முன்மொழிவை பிரதமர் சமர்ப்பித்ததையும், அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |