தேர்தல் விதிமுறைகளை மீறும் அரச அதிகாரிகள்- நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மன்னார் (Mannar) மாவட்டத்திலுள்ள சில அரச அதிகாரிகள் நாடாளுமன்ற தேர்தலுக்கு முரணான விடயங்களில் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் திணைக்கள தலைவர்களுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரச அதிகாரிகள், அரசியல் உரிமைகளில் தகாத செல்வாக்கு செலுத்தல் மற்றும் இலஞ்சம் பெறல் போன்ற சட்டத்திற்கு முரணான பழக்கங்களில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான முறைப்பாடுகள்
இதன்படி மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் வே. சிவராஜவினால்( Sivaraja ), மன்னார் மாவட்டத்தில் உள்ள திணைக்கள தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில், “தாபன விதிக்கோவையின் அத்தியாயம் 'XXXII' இன் பிரிவின் 2 இன் கீழ் அரசியல் உரிமையை அனுபவிப்பதற்கு உரித்துடையவர்களான மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அலுவலர்களில் ஒரு பகுதியினர் நாடாளுமன்ற தேர்தல் - 2024 தொடர்பாக சட்ட முரணான பழக்கங்களில் ஈடுபட்டிருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன.
சட்டத்தை மீறும் குற்றச்செயல்கள்
குறிப்பாக தமது கடமை நேரங்களில் அரசியல் பிரசாரங்களில் ஈடுபடுதல், தமது கடமை பரப்பெல்லைக்கு உட்பட்ட அலுவலகங்களிலும், கடமையாற்றும் கிராம அலுவலர் பிரிவுகளிலும் தமது சேவை நாடிகளான பொது மக்களிடம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக தொடர்ச்சியான முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இவ்வாறான காரியங்களில் ஈடுபடும் அதிகாரி ஒருவர் 1981 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 80 (ஆ) உறுப்புரையின் கீழ் தவறொன்றை இழைத்தவராக கருதப்படுவார்.
அதிகாரி ஒருவரின் பதவி வழியாக கடமை அதிகார எல்லை பிரதேசத்தில் அவரால் அரசியல் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது இவ்வாறான தவறொன்றாக அமையும் என்பது தொடர்பாக தமது நிர்வாகத்தின் கீழ் உள்ள அலுவலர்களுக்கு அறிவூட்டும்படி கேட்டுக் கொள்ளுகின்றேன்.
சுயாதீனம் , நடுநிலை மற்றும் சுதந்திரமான தேர்தல் ஒன்றினை நடத்துவதற்கான தங்கள் ஒத்துழைப்பினை மிகவும் மதிக்கிறேன்” என உதவி தேர்தல் ஆணையாளர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |