வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக 2024/25 பெரும்போக பயிர் செய்கையின் போது நவம்பர் 26ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கும் செயன்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பொலன்னறுவை மாவட்டத்தில் 6,239 விவசாயிகளுக்கு, 9067.40 ஏக்கருக்காக 114 மில்லியன் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
பயிர்களுக்கு இழப்பீடு
2024/25 பெரும்போக பயிர் செய்கையின் போது நவம்பர் 26ஆம் திகதி முதல் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலிருந்து சபையால் பெறப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட பயிர் சேத விண்ணப்பங்களுடன் தொடர்புடைய பயிர் சேத நிதியை வரவு வைக்கும் செயல்முறை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 4,324 ஏக்கர் சேதமடைந்த பயிர்களுக்காக 3,272 விவசாயிகளின் கணக்குகளுக்கு 70 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் கணக்குகளில் வரவு
அதேபோல், அம்பாறை மாவட்டத்திலிருந்து பெறப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட பயிர் நிலங்களில் 7,657 ஏக்கருக்காக 8,705 விவசாயிகளின் கணக்குகளில் நேற்று(10) 122 மில்லியன் ரூபாய் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் பெய்த கனமழையால் நெல், பச்சை மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான பயிர் சேத இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |