சம்மாந்துறையில் நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கை
சம்மாந்துறை(Sammanthurai) சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கமைய தற்போதைய நோன்பு காலத்தை முன்னிட்டு உணவுப் பாதுகாப்பின் நிமிர்த்தம் சில உணவு விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.
இதன்போது காலாவதியான மற்றும் மனித பாவனைக்கு உதவாத சில உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த உணவகங்களின் உரிமையாளர்கள் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூபா 10000 தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனையின் பிரகாரம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எம்.எம்.நௌசாத் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இந்த நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான உள்ளூர் உற்பத்தி பானவகைகள், ஒரு வகை நூடில்ஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றன அதன் உள்ளடக்கத்தை அறிய அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர நோன்பு கால உணவுப் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமாக இப்தாருக்கான சிற்றுண்டி உற்பத்தி செய்யப்படும் இடம் பல சரக்க கடைகள் என்பன பரிசோதிக்கப்பட்டதுடன் QR முறை மூலம் வந்த முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



