எட்டு உயிர்களை பறித்த பாதை; அரச அதிகாரிகள் இன்னும் கண்டுகொள்ளவில்லை : தாஹிர் விசனம்
எட்டு உயிர்களை பறித்த பாதை தொடர்பில் அரச அதிகாரிகள் இன்னும் கண்டு கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்(Ashraff Thahir) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(03) இடம்பெற்ற அமர்வின் போது அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நாட்டில் இவ்வாறானதொரு இடர் ஏற்படபோகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அலட்சியத்தில் அதிகாரிகள்
இருப்பினும் அப் பிரதேசத்தில் உள்ள அரச அதிகாரிகள் அப்பிரதேசத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை இந்த இடத்தில் நான் வினயமாக கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
அதேபோல் மாவடிப்பள்ளி, கிட்டங்கி ஆகிய பாலங்கள் சரியாக நிர்மாணிக்கப்படாமையின் காரணமாக வெள்ள நிலைமைகளின் போது அப்பகுதியில் உயிர் ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக உள்ளது.
இம்முறை ஏற்பட்ட உயிர் சேதம் போன்று இன்னொரு முறை இடம்பெறாமல் எதிர்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கவனம் செலுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார்.
மக்களுக்கான நிவாரணத்தொகை
அத்துடன் கடந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட அஸ்வெசும நலத்திட்டத்தினால் வறுமைக்கோட்டில் வாழ்கின்ற மக்களை இன்னும் பாதிப்புக்குள்ளான நிலையினையே அவதானிக்க முடிகிறது.
இத்திட்டமானது அப்போதைய அரசாங்கத்தினை தக்கவைப்பதற்காக கொண்டுவரப்பட்ட மக்களுக்கு பொறுத்தமற்ற ஒன்றாகும்.
இது விடயம் குறித்து அப்போதைய அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் அரசியல் அதிகாரம் மூலம் நியமிக்கப்பட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் குறித்த நடவடிக்கைகளை, தற்போதைய அரசாங்கம் இது வரை முன்னெடுக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டிய அவர், இந்த விடயம் குறித்தும் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |