சிறையிலிருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரம்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்
மட்டக்களப்பு (Batticaloa) சிறைச்சாலைக்குள்ளிருந்து கைதியொருவர் மேற்கொள்ளும் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய மூவர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிந்தவூரைச் சேர்ந்த நபரொருவர் போதைப் பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் தற்போதைக்கு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சிறைச்சாலைக்குள் கருப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த இன்னொரு போதைப்பொருள் வர்த்தகர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். குறித்த நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் வியாபாரம்
இந்நிலையில் சிறைச்சாலைக்குள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிந்தவூர் நபர், தனது மனைவி மற்றும் நண்பரை தொடர்பு கொண்டு கருப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த நபருடன் இணைந்து போதைப் பொருள் வர்த்தகம் மேற்கொண்டுள்ளார்.
அதேவேளை, மட்டக்களப்பு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம், கருப்பங்கேணியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அம்பாறை சாய்ந்தமருதை சேர்ந்த நபரொருவரையும், நிந்தவூர் பெண்ணொருவரையும் , கருப்பங்கேணியைச் சேர்ந்த நபரொருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கேரள கஞ்சா, ஐஸ் போதைப் பொருள் 50 கிராம், ஹெரோயின் போதைப் பொருள் 25 கிராம் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சமபவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
