விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ள அசாத் மௌலானா
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகச் செயலாளரான அசாத் மௌலானா , வெகுவிரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் தொடர்புகள் இருப்பதாக அசாத் மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் பரபரப்பு தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அத்தோடு, பிள்ளையானின் வேண்டுகோளின் பிரகாரம் பிள்ளையானுக்கு நெருக்கமான தான் உள்ளிட்ட குழுவொன்று இராணுவப் புலனாய்வுத்துறையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தாக்குதல் விசாரணை
தற்போதைக்கு அசாத் மௌலானா வெளிநாட்டில் தலைமறைவாக வாழ்ந்து வரும் நிலையில் கடுமையான முயற்சிகளின் பின்னர் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதன் பிரதிபலனாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கவும், அது தொடர்பில் விரிவான வாக்குமூலம் ஒன்றை வழங்கவும் அசாத் மௌலானா இலங்கை வர சம்மதம் தெரிவித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
வெகுவிரைவில் அவரை இலங்கைக்கு அழைத்து வரும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |