திருகோணமலை கடலில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை
திருகோணமலையை (Trincomalee) அண்மித்த கடலில் கண்டெடுக்கப்பட்ட ஆளில்லா விமானத்தை இந்தியாவிடம் (India) கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த ஆளில்லா விமானத்தை கடந்த ( 2024.12 27) அன்று திருகோணமலை அருகே உள்ள கடலில் வைத்து கடற்றொழிலாளர் குழு கண்டுபிடித்தது.
பின்னர் கரைக்கு எடுத்து வரப்பட்ட ஆளில்லா விமானம் கடற்படையினர் ஊடாக விமானப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
முதற்கட்ட விசாரணைகள்
இது தொடர்பில் செயற்படுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இறுதி அறிக்கை விமானப்படை தளபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகள் மூலம் குறித்த ஆளில்லா விமானம் இந்திய நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதுடன், அது பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டதென்றும் தெரியவந்துள்ளது.
இந்த விமானம், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக கடலில் இருந்துள்ளதாகவும், அதை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்கவும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையளிக்க நடவடிக்கை
அத்துடன் கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்ட ஆளில்லா விமானத்தால் இலங்கைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் குறித்த ஆளில்லா விமானம் விரைவில் இந்திய நிறுவனத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |