கிழக்கில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் குடிநீருக்கான நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் தற்போது கிழக்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவாவின் பங்கெடுப்புடன் இடம்பெற்ற அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில் இது தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதில், இரண்டு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதுடன், மக்கள் எதிர்நோக்கும் சவால்களை முன்வைத்து பேசப்பட்ட கலந்துரையாடலில் இரவோடிரவாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட திட்டம்
பென்கல்(Fengal) புயல் நிலையை அடுத்து தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் வழங்கல் குழாயில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக காரைதீவு, மாளிகைக்காடு மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களுக்கான குடிநீர் வழங்கல் பாதிக்கப்பட்டு காணப்பட்டது.
மேற்குறிப்பிட்ட கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, கிராம நிலைதாரிகளினூடாக குடிநீரை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் காரைதீவு பிரதேச சபையின் உதவியுடன் மக்களுக்கு பாதுகாப்பான தூய குடிநீர் வழங்கும் பொருட்டு மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை குடிநீர் வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டு வந்ததுடன் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
குடிநீர் வழங்கல்
மேலும், இந்த செயற்பாட்டை விஸ்தரிக்க தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை, காரைதீவு பிரதேச செயலகம் என்பன இணைந்து காரைதீவு மற்றும் மாளிகைக்காடு பிரதேச மக்களுக்கு பௌசர்கள் மூலமாக குடிநீர் வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.
இதனடிப்படையில், பிரதேச செயலகத்தின் உதவியுடன் காரைதீவு பிரதேச செயலத்திற்குட்பட்ட 10 இடங்களில் மாளிகைக்காடு சமூக அபிவிருத்தி சபை, தனியார் நிறுவனமொன்று மற்றும் சமூக அபிவிருத்தி அமையம் ஆகியவற்றின் உதவியுடன் பாதுகாப்பான குடிநீர் தாங்கிகளை வைத்து, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பௌசர் மூலம் குடிநீர் விநியோக நடவடிக்கை தொடர்ச்சியாக செயற்படுத்தப்பட்டும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றது.
தற்போது நிலவும் வெள்ள அனர்த்த சூழலில், இக்குடிநீர் வழங்கல் மூலம் சுமார் 1500 குடும்பங்கள் நன்மையடைந்து வருவதுடன், இச்செயற்பாடுகள் யாவும் காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், கிராம நிலதாரிகள் மற்றும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தரின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சீர் செய்ய விழிப்புணர்வு
தொடர்ந்தும் அனர்த்த முகாமைத்துவ கூட்டத்தில் சாய்ந்தமருது வித்தியாலய தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப், மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர்கள், மாளிகைக்காடு அல்- ஹுசைன் வித்தியாலய சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவர்களின் நலன்கருதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாளிகா வீதியில் வெள்ளம் ஏற்படாது தடுக்கும் விதமாக சகல வடிகான்களும் உடனடியாக துப்பரவு செய்யவேண்டியம் அவசியம் தொடர்பிலும், மீனவர்களின் பிரதான பாதையான மாளிகா வீதியின் நிலைகள், வெள்ளத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் தொடர்பிலும் அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமர் விளக்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |