முஸ்லிம் சமூகத்தின் துஆ தான் என்னை காப்பாற்றியது! வைத்தியர் ஷாபி
முஸ்லிம் சமூகத்தின் துஆ தான் என்னை காப்பாற்றியது என ஈஸ்டர் தாக்குதலின் போது அதிகம் பாதிக்கப்பட்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(09) இடம்பெற்ற அநீதிக்கு எதிரான நீதியின் போராட்டம் எனும் புத்தக வெளியீட்டின் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தைரியம், நீங்கள் கொடுத்த தைரியம். இந்த உணர்வு, நீங்கள் கொடுத்த உணர்வு. இது நான் கண்ட வெற்றி இல்லை. இது வைத்தியர் ஷாபின் வெற்றி இல்லை.
முஸ்லிம் சமூகத்தின் மனநிலை
உங்கள் எல்லோருக்கும் தெரியும் 2019ஆம் ஆண்டு குண்டு வெடிப்பிற்கு பிறகு இந்த முஸ்லிம் சமூகத்தின் மனநிலை.
உங்களுக்குள் ஜமாத்காரன் இருக்கவும் இல்லை உங்களுக்குள் தௌஹீத்காரன் இருக்கவும் இல்லை உங்களுக்குள் சூபி முஸ்லிம் இருக்கவும் இல்லை.
நீங்கள் எல்லோரும் 2019ஆம் ஆண்டினை நினைத்துப் பாருங்கள். நாங்கள் எல்லாம் ஒரே ஒரு முஸ்லிம் அல்லாஹ்வையும், ரசூலையும் நம்பிய மக்களை மட்டும் தான் எங்களின் உள்ளத்தில கொண்டோம்.
நாலாவது மாடி என்பது ஒரு கிரிட்டிகல் யூனிட் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அந்த கிரிட்டிகல் யூனிட்ல என்ன கொண்டு போய் நிற்பாட்டி இதுதான் நாலாவது மாடி என்று இரவு ஒரு மணிக்கு கதவு ஒன்றை திறந்து இங்கு தான் மாக்கந்தர மதுஷும் இருக்கிறார் என்று எனக்கு அறிமுகப்படுத்தி கூறப்பட்டது.
உருவெடுத்த போராட்டம்
இந்த போராட்டத்தில் இது வைத்தியர் ஷாபியின் போராட்டமாக உருவெடுத்திருந்தாலும் என்னுடைய பார்வையில் இது இலங்கையில் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய முஸ்லிம் சமூகத்தினுடைய ஒரு போராட்டம் ஆகும்.
வைத்தியர் ஷாபி என்பது சிலுவையில் அறையப்பட்ட ஒரு பெயர் மட்டுமே தான். ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் அந்த துயரத்தில் என்னை தங்களுடைய உறவுக்காரனாக தங்களுடைய மகனாக தங்களுடைய ஒரு சொந்தக்காரனாக எடுத்து என்னுடைய துன்பத்தை தங்களுடைய துன்பமாக தோலில் தூக்கியது.
சிறுபான்மையாக வாழ்ந்த இந்த முஸ்லிம்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு அபாண்டமான பழி. அரசியல் அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி கேவலமான இனவாதத்தின் உச்சகட்டத்தில் தண்டிக்கப்பட்ட ஒரு தனி மனிதனாக இந்த சமூகம் என்னை பார்க்கவில்லை.
இன்று நான் அழைத்திருந்த இந்த அழைப்பிதழை தாண்டி இங்கு அநேகமானவர்கள் ஒரு உணர்வு பூர்வமான நிகழ்வாக கல்முனை தொட்டு காலியிலிருந்தும், யாழ்பாணத்தில் இருந்தும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருப்பது இந்த சமூகத்தின் மேன்மையை சுட்டிக்காட்டி நிற்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |