இனத்துக்குள் பிளவு கொண்டுவருவோரின் முகத்தில் கரி பூசும் தேசிய மக்கள் சக்தி
இன்னும் சில தினங்களில், கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, விரைவாக அது, பாவனைக்காக கையளிக்கப்படும் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
நேற்று(17) இடம்பெற்ற போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, கிராமப்புற வீதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கிண்ணியா பிரதேச ஹிஜ்ரா வீதியை புனரமைப்பு செய்வதற்கான அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இது குறித்து எவரும் கால்புணர்ச்சி கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பாலத்தை வைத்து, சமூக ஊடகங்களில் இனரீதியாக மதரீதியாக பிரிவினையை ஏற்படுத்துவதற்கு தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்.
ஆட்சிக்காலம்
எவர் என்ன சொன்னாலும் குறிஞ்சாக்கேணி பாலம் எங்களுடைய ஆட்சி காலத்திலேயே கட்டப்படும், எங்களுடைய ஆட்சி காலத்திலே அது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன்.
மக்கள் மத்தியில் எந்தவிதமான பிரிவினைகளை தூண்ட முடியுமோ அந்த அளவுக்கு அதனை செய்து, தமது சுய இலாபங்களுக்காக அரசியலைச் செய்து வந்த சம்பிரதாயங்களுக்கு முடிவு கட்டி, ஒரு மக்கள் மயமான ஆட்சி முறையை இந்த நாட்டில் தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்தியிருக்கின்றது.
முஸ்லிம்களை அதிக பெரும்பான்மையாகக் கொண்ட கிண்ணியா பிரதேசத்திலே ஒரு தமிழ் பிரதிநிதியும் ஒரு சிங்கள பிரதிநிதி இணைந்து, இந்த வேலை திட்டத்தை இங்கு ஆரம்பித்து இருக்கின்றோம்.
85 மில்லியன் ரூபாய் செலவில், 1.5 கிலோமீட்டர் நீளமான இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட உள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் முதன்முறையாக கிண்ணியாவிலேயே இந்த அபிவிருத்தத்தை ஆரம்பித்திருக்கின்றோம்.
இதுதான் மக்களாட்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்பதை சொல்லி வைக்க விரும்புகிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு யார் எதை பேசினாலும், இந்தப் பிரதேசத்துக்கு உரித்தான நிதி இந்த பிரதேசத்துக்கே பயன்படுத்தப்படும்.
பிரதேசத்துக்கு உரித்தான நிதி
இந்த அடிப்படையிலேயே குறிஞ்சாக்க பாலம் இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதைக் கண்டு யாரும் அரசியல் காள்புணர்ச்சி கொள்ள வேண்டாம். கடந்த காலங்களில் இந்த நாட்டில்,வெளிநாட்டு நிதி உதவியுடன் ஆரம்பித்த 80க்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பாக ஜெயிக்கா நிறுவனத்தின் 11 வேலை திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. இதற்கு காரணம் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு இதனை எப்படி கொண்டு செல்வது என்று தெளிவான அறிவு இருக்கவில்லை.
அது மாத்திரமல்ல, இதற்குள் பல்வேறு வகைப்பட்ட ஊழல் மோசடிகள் புதைந்திருந்தன என்பதையும் நாங்கள் தற்போது கண்டுபிடித்து இருக்கின்றோம்.
இந்த நிலையில், எந்த மாற்றமும் இன்றி, அந்தந்த பிரதேசத்துக்குரிய அபிவிருத்திக்குரிய நிதியை அந்தந்த பிரதேசத்திற்கே நாங்கள் வழங்கி வருகின்றோம்.
வீதி அபிவிருத்தி வேலை திட்டங்களில், வீதிகளின் தரம் மற்றும் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக, மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் இருந்து வருகின்றன.
ஆனால் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில், அவ்வாறான சந்தேகங்களுக்கு இடமில்லை. வீதி அபிவிருத்திகளுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதி முழுமையாக அது பிரதேச மக்களுக்காக பயன்படுத்தப்படும்.
மக்களின் பொறுப்பு
இதனை பரிசோதிப்பதும், மதிப்பீடு செய்வதும் அரசியல்வாதிகளாக எங்களுக்கும் கடமையும் பொறுப்பும் இருப்பதை போன்று, பொது மக்களுக்கும் இருக்கின்றது.
வீதிகள் புனரமைப்புச் செய்யப்படுகின்ற போது, அதனோடு இணைந்து அந்தப் பிரதேசத்துக்கான வடிகான் அமைப்புகளையும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றேன்.
அப்போதுதான் வெள்ள அனர்த்தங்களிலிருந்து அந்தப் பிரதேசத்தை பாதுகாக்க முடியும். மக்கள் செரிந்து வாழுகின்ற பிரதேசங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு பின்னர்தான் மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து பொதுவாக நிலவுகின்றது.
எனவேதான், மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களால், பருவமழை காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்தங்களினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது.
அதற்கு ஏற்ற மாதிரி அபிவிருத்திட்டங்களை வகுக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஜெயந்த ரத்தினகுமார், மேலதிக செயலாளர் எச். ஜி.ஜீவானந்தா, வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான எம்.ஈ.எம்.ராபிக், இம்ரான் அஷ்ரப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |