ரணிலின் கைது தொடர்பில் கம்மன்பில வெளியிட்ட தகவல்
பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்வதோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கிளர்ச்சி...
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையின் 3ஆவது அத்தியாயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சிகள் குறித்து பேசுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்த அறிக்கையை அமைச்சரவை அனுமதி ஊடாக ஏற்றுக்கொள்ளுமானால் மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சி இடம்பெற்றுள்ளது என்பதனை ஏற்பதாகும்.
இந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அப்போதைய அமைச்சர் விஜயபால மெண்டிஸ் 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி பட்டலந்தை அறிக்கையைச் சபையில் முன்வைத்தார்.
அவ்வாறு இல்லை எனப் பொய் கூறும் அரசாங்க தரப்பினர் 2001ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஹன்சாட்டின் ஆயிரத்து 581ஆவது பக்கத்தைப் பார்ப்பார்களானால் அதற்கான சாட்சியினை பெறமுடியும்.
விசாரணை ஆணைக்குழு
ஆகவே, பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யவோ அல்லது குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது.
1948ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுவின் சட்டத்தின் கீழ் இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
1977ஆம் ஆண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்படும் ஆணைக்குழுவுக்கே நீதிமன்ற அதிகாரம் காணப்படுகிறது.
இந்த ஆணைக்குழுவால் நபரொருவர் குற்றமிழைத்தாரா? இல்லையா? என்பதனை தீர்மானிக்க முடியும்.
அதன்படி, திசைக்காட்டியின் பொய் பிரசாரத்தில் புதிதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்யும் நடவடிக்கையும் இணைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |