சந்தையில் தொடரும் அரிசிக்கான தட்டுப்பாடு!
சந்தையில் சில வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மரதகஹமுல அரிசி வியாபாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
அதிக விலை காரணமாக அரிசி விற்பனை சுமார் 50% வரை குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், அண்மைக்காலங்களில் சந்தையில் அரிசியானது கட்டுப்பாட்டு விலையை விடவும் அதிகரித்து காணப்பட்டதால், தற்போது நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரிசியின் கட்டுப்பாட்டு விலை
இதனடிப்படையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஒக்டோபர் 24 ஆம் திகதி பாரிய அரிசி உற்பத்தியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது, கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்யுமாறு பணித்திருந்தார்.
மேலும் தற்போது நாட்டிலுள்ள நெல் மற்றும் அரிசியின் கையிருப்பு குறித்த தரவு அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கடந்த நவம்பர் 06ஆம் திகதி கையளிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் சந்தையில் குறிப்பிட்ட வகை அரிசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், கிடைக்கும் அரிசி கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் மக்களும் வியாபாரிகளும் தகவல் தெரிவித்துள்ளனர்.
போதுமான அளவு அரிசி கையிருப்பு
எனினும், தற்போது நாட்டில் நெல் மற்றும் அரிசி தொடர்பில் வெளியான அறிக்கையின் அடிப்படையில் போதுமான அளவு நாட்டு அரிசி இருப்பதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் எம்.எம். நைமுதீன் குறிப்பிட்டுள்ளர்.
மேலும், அரிசியின் விலையை அதிகரிப்பதற்காக சில அரிசி நிறுவன உரிமையாளர்கள் செயற்கையாக அரிசி தட்டுப்பாட்டை ஏற்படுத்தி வருவதாகவும், அடுத்த சில நாட்களில் இதற்கான தீர்வு வழங்கப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |