இன்றைய நாளுக்கான காலநிலை அறிவிப்பு
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த பெங்கல் (Fengal) புயலானது நேற்று (30) பிற்பகல் 11.30 மணியளவில் ஒரு சூறாவளியாக வட தமிழ்நாடு – புதுச்சேரி கரைகளைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்துள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம்(Department of Meteorology) தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இன்று (30) மேற்கு - தென்மேற்குத் திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 3 மணித்தியாலங்களில் படிப்படியாக ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை
தொடர்ந்தும் வடக்கு மாகாணத்தில் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.
இதன் தாக்கம் காரணமாக, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்தும் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். ஆகவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |