ஊழல் செய்தால் 3 மடங்கு கூடுதல் அபராதம்...! வெளியான அறிவிப்பு
2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் (Anti-Corruption Act) அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய திருத்தங்களின் தொடர், அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திருத்தங்கள் மூலம் ஊழல் நடவடிக்கைகளின் மூலம் ஈட்டப்படும் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் அபராதங்களை அதிகரித்தல் மற்றும் பிணை வழங்குவதற்கான நிபந்தனைகளை கடுமையாக்குதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்தின்படி, ஒரு நபர் ஊழல் நடவடிக்கை மூலம் சொத்துக்களைப் பெற்றுள்ளார் அல்லது மாற்றியுள்ளார் என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டால் அந்த சொத்தின் மதிப்பை விட குறைந்தது 3 மடங்கு கூடுதல் அபராதத்தை நீதிமன்றம் விதிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நிதி இழப்பு
முன்னைய சட்டத்தின் கீழ் ஊழல் குற்றத்திற்கான அதிகபட்ச தண்டனை 10 ஆண்டுகளுக்கு மிகாமல் கடின உழைப்புடன் கூடிய சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் ரூபாய் அபராதமாகும்.
மேலும், ஊழல் நடவடிக்கையால் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டால் அந்த முழு இழப்புக்கு ஈடான தொகையை கூடுதல் அபராதமாக வசூலிக்கவும் புதிய திருத்தம் வழிவகை செய்கிறது.

அத்தோடு கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பிணை வழங்கும் நடைமுறையும் புதிய திருத்தத்தின் மூலம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
- ரூபாய் 100,000 இற்கு குறையாத லஞ்சம் பெறுதல், கொடுத்தல் அல்லது கோருதல்.
- ரூபாய் 500,000 இற்கு குறையாத அரச இழப்பை ஏற்படுத்துதல்.
மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்ட சந்தேகநபர்களுக்குப் மேல் நீதிமன்றத்தினால் மட்டுமே பிணை வழங்க முடியும்.
அதுவும் விதிவிலக்கான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும்.
சிறைத்தண்டனை
இதன் மூலம் நீதவான் நீதிமன்றங்களுக்கு இத்தகைய சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கும் அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது.
சொத்து அறிவிப்புகளைப் பகிரங்கப்படுத்தும்போது தனிநபர் தரவுகளைப் பாதுகாப்பது தொடர்பாகப் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பகிரங்கப்படுத்தப்பட்ட சொத்து அறிவிப்பை, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அல்லது நிறுவனத்திற்குச் சமர்ப்பிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்துவது குற்றமாகும்.
இத்தகைய குற்றத்திற்கு ரூபாய் 100,000 அபராதம் அல்லது ஒரு வருட சிறைத்தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
முன்னர் இருந்த சட்டத்தின் படி, சொத்து அறிவிப்பாளருடன் 6 மாதங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழும் நபர்களின் சொத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டியிருந்தது.
தனிநபர் சுதந்திரம்
ஆனால், தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தத் தேவை புதிய திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை எண், கடவுச்சீட்டு எண் மற்றும் அதிகாரிகளால் அடையாளத்திற்காகப் பயன்படுத்தப்படும் பிற எண்களும் பாதுகாக்கப்பட்ட தனிநபர் தரவுகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்த திருத்தத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், குறிப்பிட்ட நிறுவனங்களாகக் கருதப்படும் நிறுவனங்களில் அரசின் பங்கு சதவீதத்தை மாற்றுவதாகும்.
முன்னர் அரசுக்கு 25% பங்குடைமை கொண்ட நிறுவனங்களும் இச்சட்டத்திற்கு உட்பட்டிருந்தன.
புதிய திருத்தத்தின் மூலம் அந்த எல்லை 50% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அரசுக்கு 50 இற்கும் குறைவான பங்குடைமை கொண்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் அல்லது ஊழியர்கள் இனி இச்சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள ஆகக் கருதப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.