காத்தான்குடியில் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்
காத்தான்குடியில் உள்ள றிஸ்வி நகரில் றஸ்மீ குழு கட்சியின் ஆதரவாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதல் நடாத்திய குழு தப்பி ஓடியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து அப்பகுதி பெரும் பதற்றமடைந்துள்ளது. இதனால் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பான விசாரணை
காத்தான்குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி காரியாலம் கடந்த 6 ம் திகதி உடைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணி கட்சி ஆதரவாளர்களுக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 14 ம் திகதி இரு கட்சி ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் புதிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு 7.30 மணியளவில் றிஸ்வி நகரில் வீட்டின் முன்னால் நின்று கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் மீது அங்கு பொல்லுகள், வாள்கள் மற்றும் கத்தி என கூரிய ஆயுதங்களுடன் சென்ற றமீஸ் குழுவினர் கத்தியால் அவர் மீது தாக்குதல் நடாத்தியதையடுத்து அவர் படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதலை நடத்திய குறித்த குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்தவரை காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தையடுத்து அங்கு விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், அங்கு தேர்தல் கண்காணிப்பு குழுவான கபே அமைப்பு சென்று கண்காணித்துள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்ததான்குடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |