சிக்குன்குனியா வைரஸ் தொற்று தொடர்பில் அவதானம்
டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துவதுமாறு பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு நீண்ட மற்றும் குறுகிய காலத்திட்டம் ஒன்றைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 18,749 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம், மழையுடனான வானிலையினால் டெங்கு நோய் பரவல் அதிகரிக்கக் கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வைரஸ் தொற்று
அதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, காலி, மாத்தளை, மட்டக்களப்பு, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்கள் டெங்கு அபாயம் மிக்க மாவட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கடந்த சில மாதங்களாக நாட்டின் பல பகுதிகளில் சிக்குன்குனியா வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நுளம்பு பெருகும் இடங்களைக் கண்டறிந்து அதனை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்பு கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் உடல் முழுவதையும் மூடும் வகையிலான ஆடைகளை அணியுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் மற்றும் வாந்தி, தோலில் சிவப்பு புள்ளிகள் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |