அரசியல் தலைமைத்துவத்திற்கான போட்டி.. மறக்கப்பட்ட கொள்கை
மக்களின் பேராதரவைப்பெற்ற செல்வாக்கான அரசியல் கட்சிகள், அமைப்புக்கள், இயக்கங்கள் என்பவற்றின் தலைவர்கள் எதிர்நோக்கும் உள்ளக ரீதியான சவால்களில் ஒன்று "அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்" என்ற எதிர்பார்ப்புடன் சிலர் தங்களுக்குள் இருப்பதாகும்.
இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விதிவிலக்கல்ல என்பதை மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் காலம் தொட்டு இன்றுவரை பார்த்து வருகிறோம்.
இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவு பெற்ற அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது.
கட்சியின் ஆரம்ப காலம்
மறைந்த தலைவர் அஷ்ரப் கட்சியை ஆரம்பித்து பல சவால்கள், உயிரச்சுறுத்தல்களையும் எதிர்கொண்ட சந்தர்ப்பங்களிலும் தனது நேசத்துக்குரியவர்கள் தனக்கு துரோகம் செய்த போதும், கட்சியை விட்டு வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பங்களில் அரச ஆதரவோடு அதிகாரங்களைப்பெற்று முஸ்லிம் காங்கிரஸுக்கு சவாலாக வந்த போதும், முஸ்லிம் சமூகத்திற்கும் இந்தக்கட்சிக்கும் பல விமர்சனங்களைத் தாங்கிக் கொண்டு உறுதியான தலைமைத்துவத்தைக் கொடுத்தார்.
தலைவர் அஷ்ரப் மறைந்ததன் பின்னர் தலைமைத்துவப் போட்டி கட்சிக்குள் ஏற்பட்ட போது, தான் தலைவர் என சிலர் கோசமெழுப்பி தலைமைத்துவத்தை அடைய முயற்சித்த போது அவை வெற்றியளிக்கவில்லை.
மாறாக, மர்ஹும் தலைவர் அஷ்ரபின் பாசறையில் வளர்தெடுக்கப்பட்ட போராளிகளால் தலைவராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார்.
இந்த தலைமைத்துவ போட்டியினால் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சிலர் அரச ஆதரவோடு பிரிந்து தனிக்கட்சி அமைத்து தங்களை தலைவர்களாகக்காட்டிக் கொண்டாலும் மக்கள் மத்தியில் முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்குமான கேள்வி குறையவில்லை.
பலப்படுத்தும் எதிர்ப்புகள்
தேசியத்தில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் இலங்கை முஸ்லிம்கள் என்ற போது அங்கு நினைவு படுத்தப்படும் நாமம் என்றால் அதில் ரவூப் ஹக்கீம் நாமமும் உண்டு.
தேசிய முஸ்லிம்களுக்காக மட்டுமல்ல, சர்வதேச முஸ்லிம்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், ஒவ்வொருவரும் தங்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக தலைமைகளை எதிர்க்கிறார்கள். இவ்வாறானவர்களின் எதிர்ப்பும் வெற்றுக்கோசங்களும் எதிர்க்கப்படுபவரை பலப்படுத்துமே தவிர, ஒரு போதும் பலவீனப்படுத்தாது.
கட்சிப்போராளிகள், ஆதரவாளர்கள், நடுநிலையானவர்கள், சமூக சிந்தனை கொண்ட புத்திஜீவிகளும் தற்கால அரசியலில் தலைமைத்துவத்தின் வகிபாகத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |