அரசாங்கத்திற்கு சவாலாகும் இனிவரும் நாட்கள் : அநுர அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை அரசாங்கத்திற்கு அடுத்த 6 மாத காலப்பகுதி மிகவும் சவாலான காலப்பகுதியாக இருக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் பாரத் அருள்சாமி (Bharat Arullsamy) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில், அரசியல் கலாச்சாரத்தின் மீது மக்கள் கொண்ட வெறுப்பு மற்றும் நாட்டின் ஸ்தீரதன்மையை நோக்காகக் கொண்ட அடிப்படை எதிர்பார்ப்பின் அலை, தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை உறுதி செய்தது.
நான்காம் கட்ட நிதி உதவிக்கான இணக்கப்பாடு
மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)அதிகாரிகளுக்கிடையிலேயான ஒப்பந்தத்திற்கு இணக்கப்பாடு வந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட நிதி உதவி நிறைவு செய்யப்பட்டு நான்காம் கட்ட நிதி உதவிக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஏதுவாக அமையக்கூடிய காரணியாகும். எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் ஜூன் மாதத்திற்கு இடையிலான காலப்பகுதி இந்த அரசாங்கத்திற்கு மிகவும் சவாலான காலப்பகுதியாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது மீள் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் உறுதியளித்த அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகின்றது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் காலம்
எனினும் தொடர்ந்து, இவ் அரசாங்கத்திற்கு எம்மக்கள் மீது பாரிய பொறுப்பும் அதேபோன்று நாடு முழுவதும் உள்ள மக்களின் ஏகோபித்த பாரிய எதிர்பார்ப்பும் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு உள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளையும் அரசியல் தலைமைகளின் குறைகளையும் சுட்டிக்காட்டிக் கொண்டு காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |