கிழக்கில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் : மக்களுக்கான எச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் கிழக்கில் நிலை கொண்டுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நேற்று (25) 11.30 மணியளவில் தென்கிழக்காக மட்டக்களப்பிலிருந்து ஏறத்தாழ 290 கிலோ மீற்றர் தூரத்திலும் திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 410 கிலோ மீற்றர் தூரத்திலும் நிலை கொண்டிருந்தது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரைக்கு மிக அண்மையாக நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழையுடனான காற்று
மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மிகப் பலத்த மழைவீழ்ச்சியும் கடும் காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்தும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றதுடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |