கிண்ணியாவில் பால நிர்மாணம்! போக்குவரத்துக்கான மாற்று வழி
கிண்ணியா - குறிஞ்சாகேணி பால நிர்மாணத்தின் போது, இரு வருடங்களுக்கும் பயணிகளின் போக்குவரத்துக்கு மாற்று வழி தொடர்பாக சமூக அமைப்புக்களுடனான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலானது, நேற்று(30) மாலை குறிஞ்சாகேணி ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்றது.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சரும் கிண்ணியா பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
பால நிர்மாணப்பணிகள்
இந்தப் பால நிர்மாண வேலைகள் இரண்டு வருடங்கள் நடைபெற இருப்பதனால், நாளாந்தம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி, மாற்று வழி ஒன்று அமைக்கப்பட வேண்டும் என சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதன்போது, அமைச்சரிடம் எடுத்துக் கூறினர்.
இந்த நிலையில், மாற்றுப் பாதை தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்படும் எனவும், அதற்காக ஒப்பந்தக்காரர்களுடனும், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடனும் கலந்துரையாடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த கலந்துரையாடலின் பின்னர், பிரதி அமைச்சர், மாற்றுப் பாதை அமைப்பது சம்பந்தமாக, வீதி அவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்று பொறியியலாளருடன் குறிஞ்சாகேணி ஆற்றுக்குச் சென்று, கள நிலவரங்களை பார்வையிட்டார்.
மேலும், இந்த கலந்துரையாடலில், புதிதாக கொந்தராத்து வழங்கப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்கள், தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ஈ.எம்.ராபிக், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் இம்ரான், கிண்ணியா பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி பிரதேச செயலாளர் உட்பட ஏனைய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









