நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில்! அரிசி இறக்குமதியை நிறுத்த தீர்மானித்துள்ள அரசாங்கம்
அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையான அரிசி இருப்புகளைப் பெறமுடியும் என அண்மையில் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதனிடையே, எதிர்காலத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்காக திறைசேரியிடமிருந்து நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்படவுள்ள 5 பில்லியன் ரூபாய் நிதி குறித்து குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா(Harsha de Silva) வினவியதுடன், அந்த நிதியை உரிய முறையில் பயன்படுத்துவதற்கான திட்டமொன்றின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
குறைந்தபட்ச விலையில் நெல்
இதன்படி, நெல் கொள்முதல் செயல்முறை கடுமையான மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கும், செயல்பாட்டில் ஏற்படக்கூடிய முறைகேடுகளைத் தடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து குழுக்கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு கிலோகிராம் நெல்லுக்கான குறைந்தபட்ச விலை விரைவில் நிர்ணயிக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன(Namal Karunaratne) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதிலும், நெல் விலையிலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டால் அரசாங்கம் உடனடியாக தலையீடு செய்யும்.
இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில், இடைத்தரகர்கள் தங்களிடம் இருந்து மிகக் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், நெல் ஆலை உரிமையாளர்கள் சிலர் ஈரமான நெல்லை 85 ரூபாய் முதல் 95 ரூபாய் வரை மிகக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் என அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |