கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானம்
இந்தியாவிலிருந்து வருகை தந்த விஸ்தாரா விமானச்சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (19) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை மதியம் 2.49 மணிக்கு வந்தடைந்த இந்தியாவின் விமானமே சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெடிகுண்டு மிரட்டல்
குறித்த விமானமானது மும்பையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த நிலையில், தரையிறங்க 10 நிமிடங்களுக்கு முன்னர் விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்ததாக தெரியவந்துள்ளது.
மிரட்டல் அழைப்பு வந்தவுடன் இலங்கையின் விமான நிலைய அதிகாரிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதுடன் விமான நிலையத்தில் அவசரநிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 2.49 மணிக்கு, 96 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் விமானம் எவ்வித சேதமுமின்றி தரையிறங்கியுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து விரைவாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பயணிகள் முனையத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கையின் விமான சேவைகள் மற்றும் விமான நிலையமானது அதிகாரிகளுடன் சேர்ந்து முன்னெடுத்த நடவடிக்கையானது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |