சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் கலந்துரையாடுவோம்: பிமல் சபையில் குற்றச்சாட்டு
"தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இனவாதத்துடன் நடந்து கொள்வதில்லை. எந்த சட்டத்தை திருத்துவதாக இருந்தாலும் முறையாக கலந்துரையாடியே அதனை செய்வோம்’’ என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (17) நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
‘கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் அனைவரும் ஒன்றாக வாழ முடியும் என்பதனை பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரையில் மக்கள் ஆணையை வழங்கி உறுதிப்படுத்தியுள்ளனர்.
மதப்பிரிவினையற்ற செயற்பாடுகள்
இதனால் இந்த மக்கள் ஆணையை புரிந்துகொண்டு நடந்துகொள்ள வேண்டியது எமது கடமையாகும். எமது மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தொடர்பில் முறையற்ற வகையில் அரசியல் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் மதத் தலைவர்களிடம் கேட்கின்றோம். நாங்கள் அரசியலுக்காக எவ்வித இனவாதம், மதவாதத்தை கையில் எடுப்பவர்கள் அல்ல.
இப்போது நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம் எம்.பிக்கள் முஸ்லிம் மக்கள் மீது அதிகளவில் தாக்குதல்களை நடத்திய சகல அரசாங்கங்களிலும் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளனர்.
ஆனால் நாங்கள் ஒருபோதும் வாக்குகளை எதிர்பார்த்து மதவாதத்தில் ஈடுபட்டதில்லை. எமது கட்சியில் உள்ள மிகவும் பெறுமதியான ஒருவரே சரோஜா போல்ராஜ், அவர் கறுப்பு ஜுலையில் பாதிக்கப்பட்டவர்கள்.
அவர் சகல இன மக்களுடனும் இணைந்து பணியாற்றி இன்று சிறந்த தலைவியாகியுள்ளார். எமது ஜனாதிபதி பதவிக்கு வர முன்னர் ஜம்மியத்து உலமாவை சந்தித்துள்ளார்.
தனிப்பட்ட சட்டங்கள்
முஸ்லிம்கள் தொடர்பான தனிப்பட்ட சட்டங்கள் உள்ளன. இதன்படி இஸ்லாமிய சட்டங்களை மாற்றுவதென்றால் அது தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடியே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை உறுதியளித்துள்ளார். ஆனால் அதனை தெரிந்துகொண்டே இப்போது எமது அமைச்சர் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றீர்கள்.
தேசிய மக்கள் சக்தியை இந்த நாட்டின் முஸ்லிம் மக்களும் பெரிய கட்சியாக்கியது ஏன்? முஸ்லிம் அரசியல் என்று செய்பவர்கள் பலரின் அரசியல் ஹராம், அந்த அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை ஹராம், அவர்களின் வியாபாரங்கள் ஹராம், அவர்கள் மதத்தின் பெயரால் செய்வது ஹராமே.
இப்போது உள்ளூராட்சி தேர்தலின்போது சரோஜா போல்ராஜ் தொடர்பில் கூறுகின்றனர். அவர் அவ்வாறு சுவிட்ஸர்லாந்தில் எந்த கருத்தையும் கூறவில்லை. மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் மாற்றத்தை செய்ய வேண்டும்.
இஸ்லாமிய கலாசாரங்களை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். நாங்கள் கட்சியென்ற வகையில் இனவாதத்தை செய்வதில்லை. கலாசாரங்களை மதிக்கின்றோம். நீங்கள் விமர்சனங்கள் முன்வைப்பதை நிறுத்துங்கள்.
நாங்கள் எந்த சட்டத்தை திருத்தவதாக இருந்தாலும் முறையாக கலந்துரையாடியே செய்வோம். நீங்கள் கடந்த தேர்தலில் இவர்களில் பலரை நிராகரித்தீர்கள். எஞ்சியவர்களையும் நிராகரித்து கற்ற இஸ்லாமிய இளைஞர்கள், யுவதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள்’’ என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |