திருகோணமலையில் மனக்குறைகளை தீர்க்கும் புதிய திட்டம் முன்னெடுப்பு
திருகோணமலையில் மனக்குறைகளை தீர்க்கும் பொறிமுறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியானது, நேற்று (20) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது, மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களிலுள்ள மனக்குறை தீர்க்கும் குழு உறுப்பினர்களுக்கும், மனக்குறை தீர்க்கும் பொறிமுறையில் ஈடுபட்டுள்ள நலன்புரி நன்மைகள் தகவல் பிரிவு அதிகாரிகளுக்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனக்குறை தீர்க்கும் பொறிமுறை
மனக்குறை தீர்க்கும் பொறிமுறை என்பது "அஸ்வெசும" சமூக நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் வகையில் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது முதல் கொடுப்பனவுகளை வழங்குவது வரை பல்வேறு செயற்பாடுகளுடன் வேறுபட்ட வழிகளில் பாதிக்கப்பட்ட / அசௌகரியத்திற்கு உள்ளான பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் குறைகள் மற்றும் கோரிக்கைகள் என்பனவற்றை சமர்ப்பித்து அதற்கான தீர்வுகளைப் பெறும் வழிமுறையாகும்.
இச்செயற்பாட்டின் போது பாதிக்கப்பட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்படும் அவர்களது குறைகள் அல்லது கோரிக்கைகளிலிருந்து அவற்றைப் பதிவு செய்தல், வரிசைப்படுத்துதல், ஒவ்வொரு மட்டத்திலும் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அமைக்கப்பட்டுள்ள குழுக்களைப் பரிந்துரை செய்தல், பரீட்சித்தல், குழுக்களால் வழங்கப்படும் தீர்வுகளை செயல்படுத்துதல், பின்தொடர்தல், பதிவுகளை பராமரித்தல் மற்றும் தரவு முறைமையில் (IWMS) உள்ளிடுதல் வரையென முழுச் செயன்முறையையும் கொண்டுள்ளது.
நலன்புரி நன்மைகள்
இந்த பொறிமுறையானது "அஸ்வெசும" சமூக நலன்புரி நன்மைகள் திட்டத்தின் பயனாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகக் குறைந்த நிர்வாக அலகான கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து பிரதேச செயலகம், மாவட்ட செயலகம் மற்றும் தேசிய மட்டம் வரை ஒவ்வொரு மட்டத்தையும் உள்ளடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்போது நலன்புரி நன்மைகள் சபையின் சமூக பாதுகாப்பில் விசேடத்துவம் உபுல் பிரம்மனகே, மனக்குறை தீர்த்தலில் விசேடத்துவம் அமில பிரியங்க மற்றும் தொழில்நுட்ப விசேடத்துவம் சுஜாத் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், உதவி பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அஸ்வெசும மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.லிங்கேஸ், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஆர்.எம்.நபீல், நலன்புரி சபையில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





