வெளிநாட்டு வேலையால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் விழிப்புணர்வு செயற்றிட்டம்
கிழக்கில் மனித அபிவிருத்தி தாபனத்தினால் பாதுகாப்பான புலம்பெயர் தொழில்(வெளிநாட்டு வேலை) தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நிகழ்வானது மனித அபிவிருத்தி தாபன உதவி இணைப்பாளர் எம்.ஐ.றியாழ் தலைமையில் காரைதீவு லேடி லங்கா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, நிந்தவூர் மற்றும் கல்முனை உப பிரதேச செயலகங்கள் உடன் இணைந்து இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செயற்றிட்டத்தின் நோக்கம்
துறைசார்ந்த அரச உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கி இக்கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இதில் இலங்கையில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களாக செல்பவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு விதிமுறைகளை பின்பற்றி செல்ல ஊக்கப்படுத்தல் மற்றும் அதில் காணப்படும் நடைமுறை பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான புதிய சட்ட திருத்தங்களை மேற்கொள்ளவதற்கான பரிந்துரைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
இந்நிலையில், இதன்போது வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ.அஸீஸ், ஆய்வு வழிநடத்துனராக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அனுசியா சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள்.
மேலும், இதில் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் துறைசார்ந்த அரச உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



