அட்டாளைச்சேனையில் மழைநீர் தேங்கி பிரச்சனை தீவிரம்! வலியுறுத்திய பிரதேச சபை உறுப்பினர்
அட்டாளைச்சேனை - இக்றஃ வித்தியாலய வீதியின் மேற்குப்பகுதியில் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனால் டெங்கு நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதுடன், அவ்வீதியால் செல்லும் பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களையும் எதிர்நோக்கி வருவதாக பிரதேச சபை உறுப்பினர் ஜஃபர் பாத்திமா நஜா தெரிவித்தார்.
நேற்று (21) இடம்பெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முதலாவது அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முறையான வடிகான்கள் அமைப்பு
அவர் மேலும் அங்கு உரையாற்றும்போது, அட்டாளைச்சேனை 4ஆம் பிரிவு பொதுமையவாடியின் வீதியிலும், மையவாடியின் பிரதான வாயிலின் முன்பாகவும் மழை காலங்களில் நீர் தேங்கிக் காணப்படுவதால் ஜனாஸா நல்லடக்கத்திற்காக செல்லும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
முறையாக வடிகான்கள் அமைக்கப்படாததனால் இவ்வாறான நிலைமைகள் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மழை காலங்களில் இப்பிரதேச வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கி பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
இதேபோன்றுதான் ஜமாலியா வீதியும் இக்றஃ வித்தியாலய கிழக்கு வீதியும், வடிகான் இல்லாததனால் மழை காலங்களில் இப்பகுதி மக்கள் நீரில் மூழ்கி மழை நீரினை அகற்ற முடியாததோர் நிலையில் இடம்பெயர்கின்றனர்.
அட்டாளைச்சேனை பிரதேசசபை எல்லைக்குட்பட்ட வீதிகளில் குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகள் சீராக செப்பனிடப் படாமையினால் பொதுமக்கள் தங்களின் போக்குவரத்தின் போது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மேலும் உள்ளக வீதிகளில் வடிகான்கள் தடைப்பட்டு நீர் வடிந்தோட முடியாமல் உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பல வீதிகளில் மின்விளக்குகளும் எரியாமல் உள்ளது. எதிர்வரும் காலம் மழை அதிகமாக பெய்யக்கூடும்.
எனவே பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு மேற்சொல்லப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தவிசாளர் முன்வர வேண்டும்.
இந்த சபைக்கு நானும் ஒரு உறுப்பினராக வருவதற்கு காரணமாக அமைந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் றிஷாட் பதியுத்தீனும், பிரதான கருத்தாவாகயிருந்த முன்னாள் பிரதித் தவிசாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எனது தந்தை எம்.எஸ்.எம். ஜஃபரும் விசேடமாக நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் இந்தக்கட்சி மீதும் எனது தந்தை மீதும் நம்பிக்கை கொண்டு வாக்களித்த இக்றஃ வட்டாரம் உள்ளிட்ட அட்டாளைச்சேனை பிரதேச மக்களுக்கும் கட்சியின் மத்திய மற்றும் உயர்பீடத்துக்கும் எமது வேட்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |