ஊடகவியலாளர் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இம்ரான் எம்.பி
நாட்டின் ஊடகத்துறையில் நீண்டகால அனுபவமுடைய சுயாதீனமாகவும், தைரியமாகவும் செயற்பட்டுவரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல்.மப்ரூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்துகிறது என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
சிநேஷ்ட ஊடகர் யூ.எல்.மப்ரூக் தாக்கப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகவியலாளர் ஒருவர் தனது பணி காரணமாகத் தாக்கப்படுவது என்பது எந்த ஜனநாயகத்திலும் ஏற்க முடியாத ஒன்றாகும். இது, ஜனநாயகக் கொள்கைகளுக்கு சவாலாகவே பார்க்கப்பட வேண்டிய செயற்பாடாகும்.
ஊடகவியலாளர் மீதான தாக்குதல்
நாட்டில் ஊடக சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டு உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஊடகவியலாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்படுவது, ஒட்டுமொத்த ஊடகத்துறையின் மீது அழுத்தம் செலுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக உரிய விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டியது அவசியம். ஊடகத்துறையில் செயற்படும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களை எவ்விதமான அரசியல், கட்சி பேதங்கள் இன்றி கடுமையாக எதிர்க்க வேண்டியது அவசியம்.
மேலும், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய உறுப்பினர் மீது குறித்த கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |