ஆதம்பாவா எம்.பியின் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்!
தேசிய மக்கள் சக்தியின் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்க அதிகார செயல்முறை குறித்த அறிவு இல்லாதவர்களாகவும் அரசியல் களத்திலே அனுபவம் இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே யதார்த்தமாகும் என கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை முன்னாள் தவிசாளர் ரனூஸ் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஆளும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு வாக்களித்து அவர்களின் தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை ஒப்படைக்காவிட்டால் அந்த குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதியினை ஒதுக்குவதில் அரசாங்கம் ஆர்வம் காட்டாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவாவின் கருத்தொன்றை பார்க்கக் கிடைத்தது.
போதுமான அரசியல் அறிவு
தேசிய மக்கள் சக்தி நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் தவிர அனைவருமே ஊழல் மிக்கவர்கள் என்பதால் அவ்வாறான ஊழல் மிக்கவர்களின் தலைமையில் அமையும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு அரசாங்கம் எவ்விதமான நிதி உதவியும் ஒதுக்காது என அவர் அதற்கு நியாயம் கற்பித்துப் பேசுகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் கருத்தை பார்க்கும் போது சரியான அரசியல் அனுபவம் இல்லாத நிலை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் செயற்பாட்டு முறைமை குறித்து தெளிவான அறிவில்லை என்பது தெரிகின்றது.
இவர் எவ்வாறு பிரதேச அபிவிருத்தி கூட்டங்களுக்கு தலைமை வகித்து அரசாங்கத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பணியாற்றப் போகிறார் என்று எனக்கு விளங்கவில்லை.
உள்ளூராட்சி மன்றங்கள் என்பது அரசியல் ரீதியான கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது சட்டம் இயற்றுகின்ற ஒரு நிறுவனம் அல்ல.
உள்ளூராட்சி மன்ற இலக்குகளுக்கு வெளியே நின்று தான் இன்று அதிகமான வேட்பாளர்கள் இப்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். உள்ளூராட்சி மன்றங்களுடைய இயக்கம் குறித்து தெளிவான சட்ட வரம்புகள்(Legal Boundaries) காணப்படுகிறது. அவைகளுக்குள்ளே நின்று தான் ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இயங்கவேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்களின் கட்டமைப்பு
ஒரு உள்ளூராட்சி மன்றம் மூன்று வகையான நிதிகளில் தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்ளும். கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தால் காலத்திற்கு காலம் அல்லது வருடா வருடம் ஒதுக்கப்படும் மாகாண கட்டுறுத்து நிதி (PSDG), அதைப்போலவே அலுவலக மற்றும் நிர்வாக விஸ்தரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய நிதி(CPG), இந்த இரண்டு நிதிகளையும் தவிர பெரும்பாலும் ஒரு உள்ளூராட்சி மன்றம் செயற்படுவது அதனுடைய சொந்த வருமானத்தில் தான்.
சோலை வரி உட்பட ஏனைய வரிகள் (உ+ம் ஆதனவரி), சேவைக்கட்டணங்கள், ஏல விற்பனைகள், தண்டப் பணங்கள், உள்ளூராட்சி மன்றத்தால் கொண்டு நடாத்தப்படும் வேறு வகையான தொழில் முயற்சிகள் இப்படி பல்வேறு வகையான வருமானங்கள் ஒரு உள்ளூராட்சி மன்றத்திற்கு காணப்படும்.
ஒரு திறமையான உள்ளூராட்சி மன்றத்தின் தவிசாளர் என்பவர் வருமானத்தை அதிகரிக்க கூடிய விதத்தில் அந்த உள்ளூராட்சி மன்றத்தை நிர்வகிக்கும் திறன் காணப்பட்டால் மாத்திரம் தான் அவரால் ஒரு சிறந்த உள்ளூராட்சி மன்ற நிர்வாக தலைவராக இயங்க முடியும்.
உலகத்தில் சுய நிர்ணயத்துக்காக போராடும் தேசங்களின் விடுதலை வேண்டி உள்ளூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கூடியவர்களாக அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய நடவடிக்கை குறித்து பேசிக் கொண்டிருப்பவர்களாக அல்லது கட்சி அரசியல் குறித்து பிரஸ்தாபிப்பவர்களாக அந்த தலைவர்களும் உறுப்பினர்களும் காணப்பட்டால் மக்களுடைய வரி பணத்தை அல்லது அந்த உள்ளூராட்சி மன்றத்தின் வருமானத்தை மிக மோசமாக பயன்படுத்திய ஒரு சபையாகத்தான் அந்த உள்ளூராட்சி மன்றம் அமையும்.
அத்தோடு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் போது தமது பிரதேசத்தின் வேட்பாளர்கள் நமது பிரதேச அபிவிருத்தியில் எப்படியான மாற்றங்களை செய்வதற்கு வந்திருக்கிறார்கள் அந்த மாற்றங்களை அவர்களால் உள்ளூராட்சி மன்ற கட்டமைப்புக்கு உள்ளே செய்ய முடியுமா என்பதை ஆழமாக நோக்கி வாக்களிக்க வேண்டும்.
அவ்வாறான சிறந்த வேட்பாளர்களை தான் அரசியல் கட்சிகளும் இந்த தேர்தலுக்கு நிறுத்த வேண்டும்.
மேலும், இந்த இரண்டு விடயங்களில் எங்கு பிழை நடந்தாலும் ஒரு உள்ளூராட்சி மன்றம் திறமையாக செயல்பட முடியாது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் கருத்தானது இலங்கையினுடைய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் மக்களாட்சி தத்துவத்துக்கும் எதிரான மோசமான ஒரு வன்முறைக் கருத்தாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |