ஆஷுரா நோன்பின் சிறப்புகள்
அல்லாஹ்வுடன் இணைத்து கூறப்படும் பெயர்களின் வரிசையில் முஹர்ரம் மாதமும் வருகிறது.
ரமலானுக்குப் பிறகு முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பதுசிறந்த செயலாக உள்ளது. அதிலும் குறிப்பாக முஹர்ரம் பிறை 9, 10ஆகிய இருதினங்களில் நோன்பு நோற்பதுசிறப்பிலும் சிறப்பு!
“ரமலானுக்குப் பிறகு நோன்புகளில் சிறந்தது அல்லாஹ்வின் மாதமான முஹர்ரமில் நோன்பு நோற்பது ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள், நூல்: முஸ்லிம்.
ஆஷுரா நோன்பின் முக்கியத்துவம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள்.
“இது என்ன நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பாளர்: ஹள்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள். நூல்: புகாரீ, முஸ்லிம்.
‘‘ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பதின் சிறப்பைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘கடந்த காலத்தில் நிகழ்ந்த சிறுபாவங்களை அது அழித்து விடும்‘ எனக் கூறினார்கள்”
அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூகதாதா (ரலி) அவர்கள் நூல்: முஸ்லிம்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும், (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.