அநுர அரசின் வாக்குறுதிகள் : ஆதம்பாவா எம்.பிக்கு விடுக்கப்பட்ட பகிரங்க சவால்
கடந்த மாதம் காரைதீவு - மாவடிப்பள்ளி பெரிய பாலம் 245 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்பட நடவடிக்கை எடுத்திருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணியும் மந்தகதியிலேயே அமைந்துள்ளது என காரைதீவு பிரதேச சபை மாவடிப்பள்ளி வட்டார வேட்பாளர் எம்.ஆர்.எம்.மர்ஷாத் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று(07) மக்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட பிரச்சார நடவடிக்கையில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அதற்கும் தனது முயற்சியில் நடந்ததாக உரிமை கோரினார். அதுவும் இறுதியில் நிறைவேறாமல் போயுள்ளது.
பொய்யான வாக்குறுதிகள்
இந்த பாலத்தை உடனடியாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளை கேட்டுக் கொள்ளுமாறு உறுப்பினர் ஆதம்பாவாவை கேட்டுக் கொள்கிறேன்.
தொடர்ந்தும் இலங்கை முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஏ.ஆதம்பாவா அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து அபிவிருத்தி தொடர்பாக ஏதேதோ சொல்வதனை அவரின் சமூக வலைத்தளத்தின் ஊடாகவும் சிலர் அதனை செய்தியாக பதிவேற்றுவதனூடாகவும் அறிய முடிகின்றது.
அவை நடக்குமாக இருந்தால் வரவேற்கத்தக்கது. ஆனால் அவைகள் எதுவும் நடக்கவில்லை என்பதே உண்மை.
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டில் செல்வாக்கும் செலுத்தும் முக்கியமான வீதிகளில் ஒன்றான காரைதீவு -அம்பாறை பிரதான வீதியில் மாவடிப்பள்ளி பிரதேசத்தில் அமைந்துள்ள பாலம் பற்றி அவர் அறிவார் என்று நினைக்கிறேன்.
குறித்த அந்தப் பாலம் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தினால் சேதமடைந்ததோடு அதிகமாக மக்கள் பயணம் செய்யும் பிரதான வீதியாகவும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் ஒரு வாகனம் மாத்திரமே பயணிக்கக்கூடிய அகலத்தையே அந்த பாலம் கொண்டுள்ளது.
இதனால் குறித்த வீதியை பயன்படுத்தும் பொதுமக்கள், விவசாயிகள், வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக ஏற்கனவே பலராலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேற்படி பாலத்தின் மீள் நிர்மாணம் இப்போது காலத்தின் அவசியமாகின்றது.
கோரிக்கைகள்
ஒரு அனர்த்தம் நிகழ்ந்து அது ஒரு பேசுபொருளாக மாறும் வரை காத்திருப்போம் என்று முன்னாள் அரசியல்வாதிகள் கடந்துபோய் அவர்களும் காணாமல் போய்விட்டார்கள். இப்போது இருக்கும் ஆளும் தரப்பு அரசியல்வாதியான ஆதம்பாவா எம்.பியும் இந்த விடயத்தில் பாராமுகமாக இருப்பது வேதனையளிக்கிறது.
கடந்த மாதம் காரைதீவு - மாவடிப்பள்ளி பெரிய பாலம் ரூபாய் 245 மில்லியன் செலவில் அபிவிருத்தி செய்யப்பட நடவடிக்கை எடுத்திருந்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணியும் மந்தகதியிலேயே அமைந்துள்ளது.
அதேபோல் மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு, சாய்ந்தமருது, சம்மாந்துறை, நிந்தவூர் போன்ற ஊர்களின் மிகவும் பிரதான பிரச்சினையாக பார்க்கப்படுகின்ற விடயம் நெல் அறுவடை முடிந்த கையோடு யானைகள் அதிகமாக இந்த பிரதேசத்தில் வருகின்றன.
இதனால் வயல் பிரதேசங்களில் அருகில் வாழ்கின்ற மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக மின் விளக்குகள் அமைத்து தருமாறு கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.
இதற்கு முதலில் மின் குமிழ் அமைப்பதற்கு குறித்த பிரதேசத்தில் மின் கம்பம் இன்மை பிரதான காரணமாக அமைந்துள்ளது. அந்த விடயத்திலும் அரசாங்கம் கரிசனை கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்யாமல் அநுர அரசும், அவரின் எம்.பிக்களும் வாயால் வடை சுடும் அரசியலையே முன்னெடுக்கிறார்கள். அவர்களை விமர்சிப்பவர்களுக்கு பதிலை செயலில் அவசரமாக செய்து காட்ட அவர்கள் முன்வர வேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |