மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நெற்களஞ்சியசாலை : பொது மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை
மட்டக்களப்பு(Batticaloa) மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் மணற்பிட்டியில் கோடிக்கான மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டுள்ள நிலையில் காடுகளாகியுள்ள நெல் களஞ்சிய சாலையில் மீண்டும் நெல்கொள்வனவினை ஆரம்பிக்குமாறு பிரதேச விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபையினால் குறித்த நெல் களஞ்சியசாலை சகல வசதிகளுடனும் பல கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டது.
குறித்த களஞ்சியசாலையின் ஊடாக கடந்த காலத்தில் நெல் சந்தைப்படுத்தும் அதிகாரசபையினால் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வந்தபோதிலும் சில காலமாக நெல் கொள்வனவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கைவிடப்பட்ட நிலையில் களஞ்சியசாலை
எனினும், தற்போது குறித்த களஞ்சியசாலை கைவிடப்பட்ட நிலையில் காடுகள் நிறைந்ததாக காணப்படுவதுடன் அங்குள்ள கட்டிடங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையிமையினையும் காணமுடிகின்றது.
அத்துடன், எமது ஊடகவியலாளர் அப்பகுதியில் களஞ்சியசாலையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சென்ற போது அங்கு மாடுகள் அடைக்கப்பட்டுள்ளதையும், சிலர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்ததையும் காணமுடிந்ததாக தெரிவித்தனர்.
தொடர்ந்தும் இது தொடர்பில் எமது ஊடகவியலாளர் தெரிவிக்கையில்,
குறித்த நெற்களஞ்சியசாலையில் உள்ள காவலாளர் விடுதி, உத்தியோகத்தர்கள் தங்கும் விடுதி, உயர்தரத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோக திட்டம் மற்றும் கழிவறைகள் மிக மோசமான முறையில் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் அடர்ந்த காடுகளாக உருவாகிய நிலையில் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
பொதுமக்களின் கோரிக்கை
இந்த நிலையித்தின் ஊடாக நெல் கொள்வனவு செய்யப்பட்டு இதுவரையில் அரசியாக்கப்படாமல் சுமார் 25க்கும் அதிகமான நெல்மூடைகள் குறித்த நிலையத்தின் தங்கும் விடுதியில் அறைகளில் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதையும் இதன்போது காணமுடிந்தது.
தற்போது நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இலட்சக்கணக்கான பெறுமதியுடைய நெல்மூடைகள் அரிசியாக்கப்படாமல் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளதாக விவசாயிகள் இதன்போது கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில், விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்காக அமைக்கப்பட்ட இந்த நெல் களஞ்சியசாலையானது, நெல்கொள்வனவு செய்யப்படாமலிருப்பது விவசாயிகளுக்கு பெரும் இழப்பாக அமைவதுடன் தமது நெல்லை சந்தைப்படுத்த முடியாத நிலையும் காணப்படுவதாகவும் விவசாயிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், கிளின் சிறிலங்கா திட்டத்தின் மூலம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் அரசாங்கம் இந்த நெல்களஞ்சிய சாலையினையும் கருத்திற்கொண்டு இதனை திறப்பதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர் என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |