கற்பிட்டியில் பெருந்தொகை மஞ்சளுடன் ஐந்து பேர் கைது
கற்பிட்டி - பள்ளிவாசல்துறை பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான மஞ்சளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, கற்பிட்டி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பள்ளிவாசல்துறை கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட வெள்ளங்கரை பிரதேசத்தில் நேற்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்டு வீடொன்றில் சூட்சுமமான முறையில் 20 மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 860 கிலோ 250 கிராம் மஞ்சள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
ஐவர் கைது
இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி சுமார் 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஐவரும் 35 இற்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் பள்ளிவாசல்துறை மற்றும் குறிஞ்சிப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, குறித்த சந்தேக நபர்களை இன்று (26) புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது போது,14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |