நாடளாவிய ரீதியில் சுனாமி அனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல்
முதலாம் இணைப்பு
புத்தளம்
சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூறி இன்று (26) காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், முப்படையினர் கலந்து கொண்டனர்.
இதன்போது சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஆத்மா ஷாந்தி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.
இதன்போது சர்வமதத் தலைவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை
சுனாமி பேரலை அனர்த்தம் இடம்பெற்று 20 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அந்த அனர்த்தம் காரணமாக உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து இன்று (26) கல்முனைப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மெளலவி ஷபானிஸ் தலைமையில் உயிரிழந்தவர்களுக்காக கத்தமுல் குர்ஆன் மற்றும் துஆப் பிரார்த்தனை இடம்பெற்றது.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு (Batticaloa) - புதுக்குடியிருப்பில் இன்று (26) காலை 8.05 மணியளவில் ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்ட மக்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
சுனாமி அனர்த்தத்தால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (26) புதன்கிழமை காலை 9.25 முதல் 9.27 வரை அஞ்சலி செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுனாமி பேரலை
சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக, இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதுடன் சுமார் 35 ஆயிரம் பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |