குருக்கள்மட மனித புதைகுழி வழக்கில் புதிய திருப்பம்
காணாமல் ஆக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர் தொடர்பில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு இன்று (12) மீண்டும் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் திகதி, புனித ஹஜ் கடமையை முடித்துவிட்டு வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள், கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் பகுதியில் கடத்திக் கொல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதுடன், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான வழக்கே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், அப்துல் மஜீத் அப்துல் ரவூப், களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார். அதன் அடிப்படையில், கடந்த 2014ஆம் ஆண்டு, களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோர்..
வழக்கை விசாரித்த நீதிவான், “குறித்த இடத்தில் மனிதப் புதைகுழி இருக்கலாம் என நியாயமான சந்தேகம் உள்ளது” எனச் சுட்டிக்காட்டி, அரச திணைக்களங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, அந்த இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு, மன்றில் அறிக்கையிடுமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்.
இந்த பணியில், நில அளவை திணைக்களம் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தொல்லியல் திணைக்களம் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சியல் நிறுவனம் ஆகியவை இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டு, மனிதப் புதைகுழி இருப்பதற்கான சந்தேகம் உள்ள இடத்திற்கான திட்ட வரைபடத்தை நீதிமன்றுக்கு சமர்ப்பித்தன.
பின்னர், களுவாஞ்சிக்குடி பொலிஸார், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற, ஒரு தவணையை கோரி, வழக்கு 04.10.2020 அன்று கிடப்பிலிடப்பட்டது.
இந்நிலையில், முறைப்பாட்டாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், 2025 ஜூலை 11ஆம் திகதியாகிய நேற்று, 'குரல்கள்' இயக்கத்தின் சட்டத்தரணியால் நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு மீண்டும் திறந்து நீதிமன்றில் அழைக்கப்பட்டது.
நீதிமன்ற தீர்ப்பு
முறைப்பாட்டாளர் சார்பில் நீதிமன்றில் தோன்றிய சட்டத்தரணிகள் முஹைமீன் காலித் மற்றும் முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் வழக்கை மிக நுணுக்கமாக விளக்கியதையடுத்து, நீதிமன்றம், “இவ்வழக்கு நீதிமுறைக்கு ஏற்ப தொடரப்படாமல், நீண்ட காலமாக நிலுவையில் வைத்திருப்பது நியாயமற்றது” எனக் கூறி, வழக்கை 2025 ஜூலை 21ஆம் திகதிக்கு தவணையிட்டது.
அதேபோல், சட்டமா அதிபருக்கு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் அனுப்ப கட்டளையிட்டுள்ளார்.
முறையீட்டாளர் சார்பில் ‘குரல்கள்’ இயக்கத்தின் சட்டத்தரணிகள் முஹைமீன் காலித் மற்றும் முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |