இளைஞர்களை மையமாக கொண்டு சமகால அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு
இளைஞர்களை மையமாக கொண்டு சமகால அரசியல் நிலைமை தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹபீப் முஹம்மது பாத்திமா சர்மிலா தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிலைபேறான சமாதான வாழ்விற்கும் அபிவிருத்திக்கும் இளைஞர் பங்கேற்பு முக்கியம் என்பதனை நோக்காகக் கொண்டு இச்செயல்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது விடயமாகத் தெளிவூட்டும் கலந்துரையாடலும் செயலமர்வும் இன்று (04.05.2023) மட்டக்களப்பு - ஆறுமுகத்தான் குடியிருப்பிலுள்ள பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இளைஞர் யுவதிகள் பங்கேற்ப்பு
இந்நிகழ்வில் பிரதேச சகவாழ்வு அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களான ஹிந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.
நிகழ்வில் இலங்கையின் அந்நிய நாட்டவர்களின் ஆளுகை இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னரான அரசியல் நகர்வுகள் தொடக்கம் சம காலம் வரையுள்ள இனவாத அரசியல் நடவடிக்கைகளால் இலங்கை மக்கள் அனுபவித்து வரும் நெருக்கடிகள் பற்றி தெளிவூட்டப்பட்டது.
இத்தகைய குழப்பகரமான அரசியல் நிலைமைகளை மாற்றி நாட்டு மக்கள் அனைவரும் இன மத பேதமின்றி நிரந்தர சமாதானமாக வாழும் வழி முறைகளுக்கு இளைஞர் சமுதாயம் சிந்திக்கத் தலைப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.