எக்ஸ்பிரஸ் பேர்ல் உரிமைகோரல் வழக்கு: சிங்கப்பூர் மேல் நீதிமன்ற பொதுப் பிரிவில் தாக்கல்
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கிய சம்பவத்தின் தகுதிக்கான உரிமைகோரல் நடவடிக்கை தொடர்பான அசல் உரிமைகோரல் சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தின் பொதுப் பிரிவில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் சட்டமா அதிபர் உரிமைகோருபவர் என்று பெயரிடப்பட்டுள்ளார். இந்த உரிமைகோரலின் கீழ் ஆறு பிரதிவாதிகளை பெயரிடபட்டுள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணை கடந்த 15ஆம் திகதி அன்று சிங்கப்பூர் மேல் நீதிமன்றத்தின் பொதுப் பிரிவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சட்டமா அதிபர் திணைக்களம்
இதன்போது சமர்ப்பணங்களின் பின்னர் விசாரணை, 2023 ஜூன் 01ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நடைமுறை விதிகளின் கீழ் இந்த வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்தின் (எஸ்ஐசிசி) பிரிவுக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை இலங்கையின் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது ஆராய்ந்து வருகிறது.
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான வழக்கை சிங்கப்பூர் சட்ட நிறுவனம் கையாள்கிறது, இது இலங்கை அரசாங்கத்தின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட்டுள்ளது.
பேரழிவு
20 மே 2021 அன்று எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கப்பல் இலங்கையின் மேற்கு கடற்கரையில் தீப்பிடித்து மூழ்கியது.
இந்த பேரழிவு இலங்கையின் கடலோர சூழல், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் ஏராளமான கடல் உயிரினங்களின் அழிவிற்கு காரணமாக இருந்ததாகவும் தெரியவருகிறது.