இலங்கையில் வரவுள்ள உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம்
உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்பட உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் இப்பல்கலைக்கழகம் நிறுவப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2020 - 2021ஆம் ஆண்டுக்கான 10ஆவது சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி விருது வழங்கும் நிகழ்வின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி விருதுகள்
காலநிலை மாற்றம் உலகிற்கு பாரிய சவாலாக இருந்தாலும், அதனை ஆய்வு செய்வதற்கு மத்திய ஆய்வு மையம் எதுவும் இல்லை என்பதை எடுத்துரைத்த ஜனாதிபதி, இலங்கையுடன் இணைந்து செயற்படுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்விழாவில் ஆசிரியர்கள், பாடசாலைகள், பிராந்திய சுற்றுச்சூழல் அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களின் சிறந்த சேவையை பாராட்டி 129 சுற்றுச்சூழல் முன்னோடிகளுக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி பதக்கம் வென்ற 14 பேரை உருவாக்கிய அரலகங்வில விலயாய தேசிய பாடசாலை சிறந்த பாடசாலையாக விருது பெற்றது.
அதேவேளை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மத்திய மாகாண அலுவலகம் சிறந்த அலுவலகத்திற்கான விருதை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.